யாரை இறக்கலாம்னு யோசிச்சுட்டு இருந்தோம்; தோனி நானே போறேன்னு சொல்லிட்டு இறங்கிட்டார்-சிஎஸ்கே ஹெட்கோச் ஃப்ளெமிங்

By karthikeyan VFirst Published Oct 11, 2021, 6:43 PM IST
Highlights

டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான தகுதிச்சுற்று போட்டியில் ஜடேஜாவிற்கு முன்பாக தோனி தாமாக முன்வந்து களமிறங்கியதாக சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் கூறியுள்ளார்.
 

ஐபிஎல் 14வது சீசனின் முதல் தகுதிச்சுற்றில் போட்டியில் டெல்லி கேபிடள்ஸை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேபிடள்ஸ் அணி 172 ரன்கள் அடித்தது. 

173 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சிஎஸ்கே அணியில் தொடக்க வீரர் ருதுராஜும், ராபின் உத்தப்பாவும் சிறப்பாக ஆடினர். அவர்கள் இருவருமே அரைசதம் அடித்த நிலையில், உத்தப்பா 63 ரன்னிலும், ருதுராஜ் 70 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ருதுராத் 19வது ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழக்க, 11 பந்துகள் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில் வெற்றிக்கு 24 ரன்கள் தேவை என்றிருந்தபோது, ஜடேஜாவை இறக்காமல் தோனி களத்திற்கு வந்தார்.

ஆவேஷ் கான் வீசிய அந்த ஓவரின்(19) 5வது பந்தில் சிக்ஸர் விளாசிய தோனி, கடைசி ஓவரில் தொடர்ச்சியாக 3 பவுண்டரிகளை அடித்து சிஎஸ்கே அணியை வெற்றி பெற செய்தார். 6 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 18 ரன்கள் விளாசிய தோனி, நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு போட்டியை வெற்றிகரமாக முடித்துக்கொடுத்தார். தோனியின் பேட்டிங்கை அவரது ரசிகர்களும் சிஎஸ்கே ரசிகர்களும் கொண்டாடிவருகின்றனர்.

அந்த போட்டியில் ஜடேஜாவிற்கு முன்பாக தோனி களமிறங்கியது குறித்து பேசிய சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃப்ளெமிங், அடுத்ததாக யாரை இறக்கலாம் என ஆலோசித்துக்கொண்டிருந்தோம். தோனி, நானே இறங்குகிறேன் என்று சொல்லிவிட்டு அவராகவே முன்வந்து இறங்கினார். போட்டியில் எந்த மாதிரியான அழுத்தமான சூழல் அது, தோனி மீது எவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கிறது ஆகிய அனைத்தும் எங்களுக்கு தெரியும். தோனி சிறப்பாக ஆடியது மகிழ்ச்சியான விஷயம். தோனி இதை பலமுறை செய்திருக்கிறார். இம்முறை கேப்டனே எங்களுக்கு போட்டியை முடித்துக்கொடுத்தது மகிழ்ச்சி என்று ஃப்ளெமிங் கூறினார்.
 

click me!