
தென் ஆப்பிரிக்காவில் மகளிருக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. இந்தப் தொடர் வரும் 26 ஆம் தேதி வரையில் நடக்கிறது. 10 அணிகள் இடம் பெற்றுள்ள இந்த தொடரில் மொத்தம் 23 போட்டிகள் நடக்கிறது. 10 அணியும் குரூப் ஏ, குரூப் பி என்று இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் 4 போட்டிகளில் விளையாட வேண்டும். ஒவ்வொரு குரூப்பிலிருந்தும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் மகளிர் டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். அதன் பிறகு 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றுகளில் போட்டி போடும்.
குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளும், குரூப் பி பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளும் உள்ளன. இதில், நேற்று நடந்த முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மகளிர் மற்றும் இலங்கை மகளிர் அணிகள் மோதின. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா மகளிர் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி:
லாரா வோல்வார்ட், டாஸ்மின் ப்ரிட்ஸ், அனெகெ போஷ், சன் லூஸ் (கேப்டன்), க்ளோ டிரயன், நாடின் டி க்ளெர்க், சினாலோ ஜாஃப்டா (விக்கெட் கீப்பர்), மாரிஸென் கேப், ஷப்னிம் இஸ்மாயில், அயபாங்கா காகா, நான்குலுலேகோ லாபா.
இலங்கை மகளிர் அணி:
சமாரி அத்தப்பத்து (கேப்டன்), ஹர்ஷிதா மாதவி, விஷ்மி குணரத்னே, நிலாக்ஷி டி சில்வா, அனுஷ்கா சஞ்சீவனி (விக்கெட் கீப்பர்), கவிஷா தில்ஹாரி, அமா காஞ்சனா, ஒஷாடி ரணசிங்கே, சுகந்திகா குமாரி, இனோகா ரணவீரா, அச்சினி குலசூரியா.
அதன்படி முதலில் ஆடிய இலங்கை மகளிர் அணியில் கேப்டன் சமாரி அத்தப்பத்து மட்டும் நிதானமாக நிலைத்து நின்று ஆடி அரைசதம் அடித்தார். அவர் 50 பந்துகளில் 12 பவுண்டரிகள் உள்பட 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு இலங்கை அணி 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. மிகவும், எளிய இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா அணிக்கு ஆரம்பம் முதலே சொதப்பல் தான் மிஞ்சியது. ஒருவர் கூட நிலைத்து நின்று ஆடவில்லை. மாறாக, சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்து 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதையடுத்து, இன்று நடக்கும் 2ஆவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. ஒவ்வொரு குழுவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டியில் மோதும். இறுதிப் போட்டி வரும் 26 ஆம் தேதி நடக்கிறது. ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை டிஸ்னி+ஹாட்ஸ்டார் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் காணலாம்.