இலங்கை vs வெஸ்ட் இண்டீஸ் கடைசி ஒருநாள் போட்டி: உச்சகட்ட பரபரப்பில் கடைசி ஓவரில் த்ரில் முடிவு

By karthikeyan VFirst Published Mar 2, 2020, 10:18 AM IST
Highlights

இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான கடைசி ஒருநாள் போட்டி உச்சகட்ட பரபரப்பில் கடைசி ஓவரில் த்ரில்லாக முடிந்தது. 
 

வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி போட்டி நேற்று நடந்தது. 

டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் ஆடி 50 ஓவரில் 307 ரன்களை குவித்தது. இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் அவிஷ்கா ஃபெர்னாண்டோவும் கருணரத்னேவும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 60 ரன்களை சேர்த்தனர். ஃபெர்னாண்டோ 29 ரன்களில் அவுட்டாக, கருணரத்னே 44 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டார். மூன்றாம் வரிசையில் இறங்கிய குசால் பெரேராவும் சிறப்பாக ஆடினார். ஆனால் அவரும் 44 ரன்களில் அவுட்டாகி, அரைசதத்தை தவறவிட்டார். 

ஆஞ்சலோ மேத்யூஸ் 12 ரன்களில் அவுட்டாக, குசால் மெண்டிஸ் மற்றும் தனஞ்செயா டி சில்வா ஆகிய இருவரும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தனர். மெண்டிஸ் 55 ரன்களும் டி சில்வா 52 ரன்களும் அடித்து ஆட்டமிழக்க, வழக்கம்போலவே திசாரா பெரேரா அதிரடியாக ஆடி தன் பங்கிற்கு 38 ரன்களை விரைவாக குவித்து கொடுத்தார். யாருமே பெரிய இன்னிங்ஸ் ஆடாவிட்டாலும், அனைவருமே சீராக ரன்களை குவித்ததால் 50 ஓவரில் 307 ரன்களை எட்டியது இலங்கை அணி.

308 ரன்கள் என்ற சவாலான இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஷாய் ஹோப் மற்றும் ஆம்பிரிஸ் ஆகிய இருவருமே சிறப்பாக ஆடி அரைசதம் அடித்து, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 111 ரன்களை குவித்தனர். சுனில் ஆம்ப்ரிஸ் 60 ரன்களிலும் ஹோப் 72 ரன்களிலும் ஆட்டமிழக்க, அதன்பின்னர் நிகோலஸ் பூரானும் கேப்டன் பொல்லார்டும் இணைந்து மிகச்சிறப்பாக ஆடினர். 

இருவரும் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த நிலையில், அரைசதம் அடித்த பூரானை 50 ரன்களிலேயே வீழ்த்தி பிரேக் கொடுத்தார் இலங்கை அணியின் சீனியர் வீரர் ஆஞ்சலோ மேத்யூஸ். அதன்பின்னர் பொல்லார்டையும் 49 ரன்களில் வீழ்த்தினார். அதன்பின்னர் டேரன் பிராவோ, ஜேசன் ஹோல்டர் ஆகிய இருவருமே தலா 8 ரன்களில் ஆட்டமிழக்க, அவர்களை தொடர்ந்து ஹைடன் வால்ஷ், ரோஸ்டான் சேஸ் ஆகியோரும் ஒரே ஓவரில் ஆட்டமிழந்தனர். 

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் ஃபேபியன் ஆலன் மறுமுனையில் அடித்து ஆடி இலக்கை வெறித்தனமாக விரட்டினார். கடைசி 2 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸின் வெற்றிக்கு 23 ரன்கள் மட்டுமே தேவை. 49வது ஓவரில் ஹைடன் வால்ஷும் ரோஸ்டான் சேஸும் ரன் அவுட்டாகினர். ஆலன் அந்த ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்தார். மேலும் 4 சிங்கள் அடிக்கப்பட்டது. எனவே 49வது ஓவரில் 10 ரன்கள் கிடைத்தது. 

கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கடைசி ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்த ஆலன், இரண்டாவது பந்தில் ஆட்டமிழக்க, எஞ்சிய 4 பந்தில் 2 ரன் மட்டுமே அடித்ததால், 301 ரன்களுக்கு இன்னிங்ஸை முடித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி. இதையடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது இலங்கை அணி. வெஸ்ட் இண்டீஸின் வெற்றிக்காக கடுமையாக போராடிய ஃபேபியன் ஆலன், கடைசி ஓவரில் ஆட்டமிழந்ததால் இலங்கை அணி வெற்றி பெற்றது. 

Also Read - 2வது டெஸ்ட்டிலும் இந்தியா படுதோல்வி.. இந்தியாவை ஒயிட்வாஷ் செய்து டெஸ்ட் தொடரை வென்றது நியூசிலாந்து

இந்த போட்டியின் ஆட்டநாயகனாக, பூரான், பொல்லார்டு, ஹோல்டர், ஃபேபியன் ஆலன் ஆகிய நான்கு முக்கியமான விக்கெட்டுகளையும் வீழ்த்திய ஆஞ்சலோ மேத்யூஸ் தேர்வு செய்யப்பட்டார். ஹசரங்கா தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 
 

click me!