2வது டெஸ்ட்டிலும் இந்தியா படுதோல்வி.. இந்தியாவை ஒயிட்வாஷ் செய்து டெஸ்ட் தொடரை வென்றது நியூசிலாந்து

By karthikeyan VFirst Published Mar 2, 2020, 9:40 AM IST
Highlights

இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணியை வீழ்த்தி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, 2-0 என டெஸ்ட் தொடரை வென்றது. 
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடந்தது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 242 ரன்கள் அடித்தது. 

முதல் இன்னிங்ஸில் பிரித்வி ஷா, புஜாரா, ஹனுமா விஹாரி ஆகிய மூவரும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தனர். இவர்களை தவிர வேறு யாரும் சரியாக ஆடவில்லை. மயன்க் அகர்வால், கோலி, ரஹானே ஆகியோர் சரியாக ஆடவிலை. இவர்கள் மூவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். அதேநேரத்தில் நல்ல ஸ்டார்ட் கிடைத்த பிரித்வி, புஜாரா, விஹாரி ஆகியோரில் ஒருவர் கூட பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் ஐம்பதுகளிலேயே ஆட்டமிழந்தனர். ரிஷப் பண்ட்டும் சொதப்பினார். எனவே முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 242 ரன்கள் மட்டுமே அடித்தது. நியூசிலாந்து அணியின் சார்பில் ஜேமிசன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் டாம் லேதமும் டாம் பிளண்டெலும் இணைந்து சிறப்பாக ஆடினர். முதல் நாள் ஆட்டத்தை விக்கெட்டை இழக்காமல் முடித்தனர். இரண்டாம் நாளான இன்றைய ஆட்டம் தொடங்கியதுமே டாம் பிளண்டெலை உமேஷ் யாதவ் 30 ரன்களுக்கு வீழ்த்தினார். அதன்பின்னர் வில்லியம்சன் 3 ரன்களிலும் ரோஸ் டெய்லர் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த டாம் லேதமை 52 ரன்களில் ஷமி வீழ்த்தினார். அதன்பின்னர் ஹென்ரி நிகோல்ஸ், வாட்லிங், காலின் டி கிராண்ட் ஹோம் ஆகியோர் சொற்ப ரன்களில் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். டிம் சௌதியை இரண்டாவது பந்திலேயே டக் அவுட்டாக்கி அனுப்பினார் பும்ரா. 

அந்த அணி 177 ரன்களுக்கே 8 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், ஜேமிசனும் நீல் வாக்னரும் இணைந்து சிறப்பாக ஆடினர். ஜேமிசன்  பவுலிங் மட்டுமல்லாமல் பேட்டிங்கும் சிறப்பாக ஆடி இந்திய அணிக்கு குடைச்சல் கொடுத்தார். ஜேசமினும் வாக்னரும் இணைந்து 9வது விக்கெட்டுக்கு 51 ரன்களை சேர்த்தனர். வாக்னரை 21 ரன்களில் வீழ்த்தி இந்த ஜோடியை பிரித்த ஷமி, கடைசி விக்கெட்டாக ஜேமிசனையும் 49 ரன்களில் வீழ்த்தினார். இதையடுத்து நியூசிலாந்து அணி 235 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது. 

7 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, இதைவிட மோசமாக ஆடமுடியாது எனுமளவிற்கு படுமோசமாக பேட்டிங் ஆடியது. இந்திய அணியில் ஒருவர் கூட சரியாக ஆடவில்லை. அனைவருமே சொதப்பியதால் கொத்து கொத்தாக விக்கெட்டுகள் விழுந்தன. இரண்டாவது இன்னிங்ஸில் புஜாரா அடித்த 24 ரன்கள் அதிகபட்சமான ரன். பிரித்வி ஷாவும் கோலியும் தலா 14 ரன்கள் அடித்தனர். ஜடேஜா 16 ரன்கள் அடித்தார். இவர்களை தவிர மற்றவர்கள் அனைவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். மயன்க், ரஹானே, விஹாரி, ரிஷப் பண்ட் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்னில் நடையை கட்டினர். இந்திய பேட்ஸ்மேன்களின் படுமோசமான பேட்டிங்கின் விளைவாக இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 124 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டிரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளையும் டிம் சௌதி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

இதையடுத்து 132 ரன்கள் என்ற எளிய இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் டாம் லேதம் மற்றும் டாம் பிளண்டெல் ஆகிய இருவருமே அரைசதம் அடித்து வெற்றிக்கு உதவினர். இருவருமே அரைசதம் அடித்து ஆட்டமிழந்ததை அடுத்து, கேப்டன் வில்லியம்சனும் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். டெய்லரும் ஹென்ரி நிகோல்ஸும் இணைந்து இலக்கை எட்டினர். இதையடுத்து நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, இந்திய அணியை 2-0 என ஒயிட்வாஷ் செய்து டெஸ்ட் தொடரை வென்றது. 

ஆட்டநாயகனாக ஜேமிசனும் தொடர் நாயகனாக டிம் சௌதியும் தேர்வு செய்யப்பட்டனர். இந்த 2 வெற்றிகளின் மூலம் 120 புள்ளிகளை பெற்ற நியூசிலாந்து அணி, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 180 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் உள்ளது. இந்திய அணி 360 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. 
 

click me!