#WIvsSL முதல் டெஸ்ட்: இலங்கையை சொற்ப ரன்களுக்கு பொட்டளம் கட்டிய ஜேசன் ஹோல்டர்..!

By karthikeyan VFirst Published Mar 22, 2021, 3:18 PM IST
Highlights

முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியை வெறும் 169 ரன்களுக்கு சுருட்டியது வெஸ்ட் இண்டீஸ் அணி.
 

இலங்கை அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை இழந்த இலங்கை அணி, டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் இருந்த நிலையில், முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 169 ரன்களுக்கு சுருண்டது.

ஆண்டிகுவாவில் நேற்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி புதிய கேப்டனின் கீழ் களமிறங்கியது. புதிய கேப்டன் க்ரைக் பிராத்வெயிட் வெஸ்ட் இண்டீஸ் அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்று அணியை வழிநடத்துகிறார். முன்னாள் கேப்டன் ஜேசன் ஹோல்டர் ஒரு வீரராக மட்டுமே ஆடுகிறார்.

முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. குறிப்பாக ஜேசன் ஹோல்டரிடம் விக்கெட்டுகளை இழந்தது. தொடக்க வீரரும் கேப்டனுமான கருணரத்னே 12 ரன்னில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ஃபெர்னாண்டோ, சண்டிமால், தனஞ்செயா டி சில்வா என இலங்கை அணியின் பேட்டிங் ஆர்டர் சரிந்தது.

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடி அரைசதம் அடித்த தொடக்க வீரர் திரிமன்னே 72 ரன்னில் ஹோல்டரின் பந்தில் 7வது விக்கெட்டாக ஆட்டமிழக்க, அவர் அவுட்டான அடுத்த 9 ரன்னில் எஞ்சிய 3 விக்கெட்டுகளும் விழ, 169 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் சுருண்டது இலங்கை அணி.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 13 ரன்கள் அடித்துள்ளது. 
 

click me!