ஆண்ட்ரே நெல்லுடன் என்ன மோதல்? மட்டம்தட்டிய வீரரை 4 முறை டக் அவுட்டாக்கிய தரமான சம்பவம்.. மனம்திறந்த ஸ்ரீசாந்த்

By karthikeyan VFirst Published Jul 9, 2020, 10:35 PM IST
Highlights

முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஆண்ட்ரே நெல்லுடனான மோதல் குறித்து ஸ்ரீசாந்த் மனம் திறந்து பேசியுள்ளார். 
 

இந்திய அணியின் மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவர் ஸ்ரீசாந்த். இந்திய அணிக்காக 27 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 87 விக்கெட்டுகளையும், 53 ஒருநாள் போட்டிகளில் ஆடி 75 விக்கெட்டுகளையும், 10 டி20 போட்டிகளில் ஆடி 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் ஸ்ரீசாந்த்.

இந்திய அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலராக திகழ்ந்த ஸ்ரீசாந்த், 2013 ஐபிஎல்லில் சூதாட்டப்புகாரில் சிக்கி வாழ்நாள் தடை பெற்றார். அதன்பின்னர் அவர் மீதான வாழ்நாள் தடை ஏழு ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. இதையடுத்து அவர் மீதான தடை வரும் செப்டம்பர் மாதத்தில் முடிவடையவுள்ள நிலையில், மீண்டும் கிரிக்கெட் ஆடும் ஆர்வத்திலும் உற்சாகத்திலும் உள்ளார் ஸ்ரீசாந்த். 

ரஞ்சியில் கேரள அணிக்காக ஆடவுள்ளார். இந்திய அணிக்கும் ஐபிஎல்லிலும் மீண்டும் ஆடும் எதிர்பார்ப்பில் உள்ளார் ஸ்ரீசாந்த். தன் மீதான தடை முடிந்ததையடுத்து, மீண்டும் கிரிக்கெட் களம் காணவுள்ளதால் உற்சாகத்தில் இருக்கும் ஸ்ரீசாந்த், நிறைய பேட்டிகள் கொடுத்துவருகிறார். 

அந்தவகையில் ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், 2007 தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் ஆண்ட்ரே நெல்லுடனான மோதல் குறித்தும் ருடால்ஃபுடனான சுவாரஸ்ய சம்பவம் பற்றி ஸ்ரீசாந்த் பேசியுள்ளார்.

2007ல் இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்து ஆடியது. அதில் ஜோஹன்னஸ்பர்க்கில் நடந்த டெஸ்ட்டில், ஸ்ரீசாந்த் பேட்டிங் ஆடியபோது ஆண்ட்ரே நெல் ஸ்ரீசாந்த்தை வம்பிழுக்கும் விதமாக பேசிவிட்டு சென்றார். ஆண்ட்ரே நெல்லின் செயல் ஸ்ரீசாந்த்தை கோபப்படுத்த, அடுத்த பந்தை சிக்ஸருக்கு விளாசிவிட்டு பேட்டை தலையை சுற்றி ஒரு டான்ஸ் ஆடினார் ஸ்ரீசாந்த். அந்த சம்பவம் குறித்துத்தான் பகிர்ந்துள்ளார். 

அதுகுறித்து பேசிய ஸ்ரீசாந்த், ஆண்ட்ரே நெல்லின் பந்தை நான் சிக்ஸர் அடித்ததும் நிறைய பேர் சிரித்திருப்பார்கள் என்பது எனக்கே தெரியும். ஆனால் ஆண்ட்ரே நெல், என்னையும் எனது நாட்டையும் பற்றி தவறாக பேசினார் என்பது யாருக்கும் தெரியாது. எனவே அவருக்கு பதிலடி கொடுத்து அடக்க வேண்டும் என்று நினைத்தேன். அதன் விளைவாக அடித்த சிக்ஸர்தான் அது. அதேபோல, தென்னாப்பிரிக்க வீரர் ருடால்ஃப், என்னை மட்டம்தட்டினார். இந்திய அணியை பொறுத்தமட்டில் ஜாகீர் கானை தவிர வேறு எந்த பவுலரை பற்றியும் கவலைப்பட தேவையில்லை என்று என்னை மட்டம்தட்டினார் ருடால்ஃப். அதன்பின்னர் அவர் என்னை எதிர்கொண்ட 4 முறையும் அவரை டக் அவுட்டாக்கினேன் என்று ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.
 

click me!