மக்களின் பாதுகாப்புதான் முக்கியம்.. ஐபிஎல் விவகாரத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் செம ஸ்ட்ரிக்ட்டு!!

By karthikeyan VFirst Published Mar 19, 2020, 8:00 PM IST
Highlights

கொரோனா அச்சுறுத்தல் அதிகமாகிவரும் நிலையில், ஐபிஎல்லை நடத்துவது குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் கிரன் ரிஜீஜு கருத்து தெரிவித்துள்ளார்.

கொரோனாவின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகமாகிவருவதால், கிரிக்கெட் தொடர்கள் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது தள்ளிவைக்கப்பட்டுள்ளன. 

கிரிக்கெட் ரசிகர்களின் 2 மாத கால திருவிழாவான ஐபிஎல் தொடர் வரும் 29ம் தேதி தொடங்கவிருந்தது. ஆனால் கொரோனா அச்சுறுத்தலின் விளைவாக, ஏப்ரல் 15ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களுடன் பிசிசிஐ ஆலோசனை நடத்தியது. 

பிரிஜேஸ் படேல் தலைமையிலான ஆலோசனைக்கூட்டத்தில் கங்குலி, ஜெய் ஷா, ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டு ஐபிஎல்லை நடத்துவது குறித்து விவாதித்தனர். கூட்டத்திற்கு பின்னர், ஐபிஎல் போட்டிகளை விடவும் அதனால் கிடைக்கும் வருவாயை விடவும் வீரர்கள் மற்றும் மக்களின் பாதுகாப்பே முக்கியமானது என முடிவெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஐபிஎல் இரண்டு மாதங்கள் நடக்கக்கூடிய மிகப்பெரிய தொடர். ஏற்கனவே 15 நாட்களுக்கும் மேல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மேலும் ஒத்திவைக்கப்பட வேண்டிய நிலை உருவானால், அதன்பின்னர் முழு தொடரை நடத்துவது கடினம். கொரோனா தீவிரம் குறையாவிட்டால் ஐபிஎல்லை நடத்துவதே சந்தேகம்.

இதற்கிடையே, ஏப்ரல் 15க்கு பிறகும் ஒத்திவைக்கப்பட வேண்டிய சூழல் உருவானால், போட்டிகள் குறைத்து நடத்தப்படலாம் என்றும், பிசிசிஐ ஜூலை முதல் செப்டம்பர் வரை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், ஏதாவது ஒரு நகரத்தில் நடத்தப்படலாம் எனவும் பல்வேறு பார்வைகளும் கருத்துகளும் பரவுவருகின்றன. 

Also Read - 
அவங்க 3 பேரையும் சேர்த்தே ஆடும் லெவனில் ஆடவைக்கலாம்.. சேவாக்கிற்கு அவரது சக வீரரின் பதிலடி

இந்நிலையில், ஐபிஎல் குறித்து கருத்து தெரிவித்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் கிரன் ரிஜீஜூ, கொரோனா வைரஸின் தீவிரத்தை பொறுத்து, அரசாங்கம் ஏப்ரல் 15ம் தேதிக்கு பிறகு வழிகாட்டுதல்களை வழங்கும். கிரிக்கெட்டுக்கு அப்பாற்பட்ட பாதுகாப்பு விஷயங்களை பிசிசிஐ கருத்தில்கொள்ள வேண்டும். ஐபிஎல் ஒன்றும் ஒலிம்பிக் போட்டிகள் போன்றல்ல. மக்களின் பாதுகாப்புதான் முக்கியம். ஐபிஎல் போட்டிகளை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரள்வார்கள். எனவே இது கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அமைப்பை பற்றிய பிரச்னை அல்ல. நாட்டுமக்களின் நலன் சம்மந்தமான விஷயம் என்று கிரன் ரிஜீஜூ தெரிவித்துள்ளார்.
 

click me!