ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி வெற்றி பெற்று சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் கட்டமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில், முதல் போட்டியில் ஆஸ்திரேலியா மகளிர் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2ஆவது டி20 போட்டி கான்பெர்ராவில் இன்று நடந்தது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்து 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், அதிகபட்சமாக கேப்டன் அலிசா ஹீலி 29 ரன்கள் எடுத்தார். பின்னர் எளிய இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிக்கு கேப்டன் லாரா வால்வார்ட் நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுத்தார்.
அவர், 53 பந்துகளில் 6 பவுண்டரி உள்பட 5 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். டாஸ்மின் பிரிட்ஸ் 41 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசியாக 19 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.