#WIvsRSA 2வது டெஸ்ட்டிலும் அபார வெற்றி.. வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்து டெஸ்ட் தொடரை வென்றது தென்னாப்பிரிக்கா

By karthikeyan VFirst Published Jun 22, 2021, 2:20 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் 158 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2-0 என தொடரை வென்றது தென்னாப்பிரிக்க அணி.
 

வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள தென்னாப்பிரிக்க அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. முதல் டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்க அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

2வது டெஸ்ட் போட்டியும் செயிண்ட் லூசியாவில் தான் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணி, டி காக்(96) மற்றும் தொடக்க வீரர் மார்க்ரம்(77) ஆகிய இருவரின் பொறுப்பான பேட்டிங்கால் முதல் இன்னிங்ஸில் 298 ரன்களை குவித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாகவே பிளாக்வுட் 49 ரன்கள் மட்டுமே அடித்தார். ஷாய் ஹோப் 43 ரன்கள் அடித்தார். இவர்கள் இருவரைத்தவிர மற்ற அனைவருமே சொதப்பியதால் முதல் இன்னிங்ஸில் வெறும் 149 ரன்களுக்கு சுருண்டது.

149 ரன்கள் என்ற முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்க அணியில் இந்த முறை வாண்டெர் டசன் அருமையாக ஆடினார். சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த வாண்டெர் டசன் 77 ரன்களும், பின்வரிசையில் டெயிலெண்டர் ரபாடா 40 ரன்களும் அடிக்க, 2வது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 174 ரன்கள் அடித்தது.

மொத்தமாக தென்னாப்பிரிக்க அணி 323 ரன்கள் முன்னிலை பெற, 324 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் இம்முறையும் சொதப்பினர். அபாரமாக பந்துவீசிய தென்னாப்பிரிக்க ஸ்பின்னர் கேஷவ் மஹராஜ், பிளாக்வுட், ஹோல்டர், ஜோஷுவா டா சில்வா ஆகிய மூவரையும் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி 165 ரன்களுக்கே சுருண்டது. 

இதையடுத்து 158 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி, வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்து 2-0 என டெஸ்ட் தொடரை வென்றது. 2வது டெஸ்ட் போட்டியின் ஆட்டநாயகனாக ககிசோ ரபாடாவும், தொடர் நாயகனாக குயிண்டன் டி காக்கும் தேர்வு செய்யப்பட்டனர்.
 

click me!