இதெல்லாம் ஓவர்நைட்ல நடந்துருமா..? இந்தியாவிடம் மண்டியிட்டு சரணடைந்தது ஏன்..? எதார்த்தை சொல்லும் டுப்ளெசிஸ்

By karthikeyan VFirst Published Oct 14, 2019, 12:24 PM IST
Highlights

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் தென்னாப்பிரிக்க அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் படுதோல்வி அடைந்து தொடரை இழந்துவிட்டது. 
 

விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 203 ரன்கள் வித்தியாசத்திலும், புனேவில் நடந்த இரண்டாவது போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்திலும் படுதோல்வி அடைந்தது தென்னாப்பிரிக்க அணி. 

இரண்டு போட்டிகளிலுமே இந்திய அணிக்கு சவாலே விடுக்காமல் சரணடைந்தது தென்னாப்பிரிக்கா. முதல் போட்டியில் டீன் எல்கரும் டி காக்கும் கடுமையாக போராடினர். இருவருமே அபாரமாக ஆடி சதமடித்து அசத்தினர். இரண்டாவது போட்டி நடந்த புனே ஆடுகளம் ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு சாதகமாக இருந்தும் கூட, அந்த அணி ஃபாஸ்ட் பவுலிங்கில் பெரிதாக மிரட்டவில்லை. 

குறுகிய காலத்தில் டிவில்லியர்ஸ், ஹாசிம் ஆம்லா, மோர்னே மோர்கல், டேல் ஸ்டெய்ன் ஆகிய சீனியர் வீரர்கள் அனைவருமே ஓய்வு பெற்றதால் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டது தென்னாப்பிரிக்க அணி. அணியின் மொத்த சீனியர் வீரர்களும் ஒரே நேரத்தில் ஓய்வு பெற்றால், எவ்வளவு பெரிய அணியும் திணறத்தான் செய்யும். ஹாசிம் ஆம்லா டாப் ஆர்டரிலும், டிவில்லியர்ஸ் மிடில் ஆர்டரிலும் தென்னாப்பிரிக்க அணியின் தூணாக திகழ்ந்தவர்கள். அதேபோல மோர்னே மோர்கல் நல்ல ஆல்ரவுண்டர் மற்றும் டேல் ஸ்டெய்ன் அனுபவம் வாய்ந்த மிரட்டலான ஃபாஸ்ட் பவுலர். இவர்கள் யாருமே இல்லாமல், இந்தியா போன்ற அனுபவம் வாய்ந்த அணியை எதிர்கொள்வது அவ்வளவு எளிதல்ல. 

விராட் கோலி, புஜாரா, ரஹானே, இஷாந்த் சர்மா, அஷ்வின், ஜடேஜா, ஷமி, ரோஹித் சர்மா என அனுபவ வீரர்களை கொண்ட இந்திய அணியை, அனுபவமில்லாத அணியை வைத்து வீழ்த்துவது, அதுவும் சொந்த மண்ணில் வீழ்த்துவது நடக்கும் காரியமே அல்ல. அணியின் அனுபவமின்மைதான் படுதோல்விக்கு காரணம் என தென்னாப்பிரிக்க கேப்டன் டுப்ளெசிஸ் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய டுப்ளெசிஸ், அனுபவமின்மை தான் தோல்விக்கு முக்கிய காரணம். அனுபவமான வீரர்களை பெற்றிருப்பதுதான் சிறந்த டெஸ்ட் அணி என்று, இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே நான் கூறியிருந்தேன். இந்திய அணியில் நிறைய அனுபவமான வீரர்கள் இருக்கிறார்கள். இந்திய அணியின் ஓய்வறை முழுவதும் அனுபவ வீரர்களால் நிரம்பப்பெற்றிருக்கிறது. நிறைய டெஸ்ட் போட்டிகளை ஆடிய அனுபவம் கொண்ட வீரர்கள் நிறைந்திருக்கிறார்கள். 

ஆனால் எங்கள் அணி கிட்டத்தட்ட அனைத்து அனுபவ வீரர்களையும் இழந்து நிற்கிறது. டேல் ஸ்டெய்ன், மோர்னே மோர்கல், ஹாசிம் ஆம்லா, டிவில்லியர்ஸ் ஆகிய வீரர்கள் எங்கள் அணியில் இல்லை. இவர்களது இடங்களை ஓவர்நைட்டில் நிரப்ப முடியாது. இப்போது எங்கள் அணியில் இருக்கும் வீரர்கள், 5, 6, 10, 11, 12, 15 போட்டிகளில் ஆடிய வீரர்கள். எந்த அணியிலுமே, அந்த அணியின் அனுபவ வீரர்கள் இல்லாவிட்டால், இதுபோன்ற சவால்களை எதிர்கொள்ள நேரிடும். அந்த நிலையில்தான் நாங்கள் இப்போது இருக்கிறோம். அனுபவமில்லாத இளம் வீரர்கள் ஸ்கோர் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கமுடியாது. நான், டீன் எல்கர், டி காக் ஆகிய சீனியர் வீரர்கள் தான் பொறுப்பேற்று ஆடி ரன்களை சேர்க்க வேண்டும் என டுப்ளெசிஸ் தெரிவித்துள்ளார். 
 

click me!