இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்கள் குவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. எனினும், கேஎல் ராகுல் நிலையாக நின்று டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 14ஆவது அரைசதத்தை கடந்து விளையாடினார். முதல் நாளில் 59 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில், போதிய வெளிச்சமின்மை மற்றும் லேசான மழையின் காரணமாக போட்டியானது முன்கூட்டியே நிறுத்தப்பட்டது.
இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணியானது 8 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து நேற்று இரவு மழை பெய்த நிலையில், மைதானத்தில் ஈரப்பதம் இருந்துள்ளது. இதனால், போட்டி தாமதமாக தொடங்கப்பட்டது. இன்றைய நாள் தொடக்கத்தில் சிராஜ் 5 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கேஎல் ராகுல் கூடுதலாக 30 ரன்கள் சேர்த்து 2ஆவது முறையாக செஞ்சூரியனில் சதம் அடித்து சாதனை படைத்தார். அதன் பிறகு அவர் 101 ரன்களில் ஆட்டமிழக்க, இந்தியா 245 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
பின்னர் தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. இதில் எய்டன் மார்க்ரம் 5 ரன்களில் முகமது சிராஜ் பந்தில் விக்கெட் கீப்பர் கேஎல் ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து தொடக்க வீரர் டீன் எல்கருடன் டோனி டி ஜோர்ஸி களமிறங்கி நிதானமாக ரன்கள் சேர்த்தார். அவர் 28 ரன்களில் பும்ரா பந்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கீகன் பீட்டர்சன் 2 ரன்களில் நடையை கட்டினார்.
ஒன் மேன் ஆர்மியாக கடைசி வரை போராடிய கேஎல் ராகுல் – டீசண்டாக 245 ரன்கள் எடுத்த டீம் இந்தியா!
பின்னர், டேவிட் பெடிங்காம் களமிறங்கி விளையாடினர். தொடக்க முதலே நிதானமாக விளையாடி வந்த டீன் எல்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது அரைசதத்தை பதிவு செய்து விளையாடி வந்தார். இந்த நிலையில் தான் அவர், 140ஆவது பந்தில் பவுண்டரி அடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 14ஆவது சதத்தை பதிவு செய்து சாதனை படைத்தார்.
இந்த டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியில் அறிமுகமான டேவிட் பெடிங்காம் 56 ரன்கள் சேர்த்து சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பர் கைல் வெர்ரேனே 4 ரன்களில் பிரசித் கிருஷ்ணா பந்தில் ஆட்டமிழந்தார். இதன் மூலமாக தனது அறிமுக போட்டியில் பிரசித் கிருஷ்ணா முதல் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.
அதன் பிறகு மார்கோ ஜான்சென் களமிறங்கி விளையாடினார். நிதானமாக விளையாடி வந்த தென் ஆப்பிரிக்கா அணியின் டீன் எல்கர் 140 ரன்களில் களத்தில் இருக்கிறார். இறுதியாக போதிய வெளிச்சம் இல்லாத நிலையில் 2ஆம் நாள் போட்டி அரைமணி நேரத்திற்கு முன்கூட்டியே முடிக்கப்பட்டது. 2ஆம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் குவித்துள்ளது.