அந்த ரிவியூவை வீட்டுக்கா எடுத்துகிட்டு போக போறீங்க..? வில்லியம்சனின் விக்கெட்டையும் வெற்றியையும் ஒரே பந்தில் தவறவிட்ட தென்னாப்பிரிக்கா

By karthikeyan VFirst Published Jun 20, 2019, 12:52 PM IST
Highlights

இலக்கு ரொம்ப கடினமானது இல்லை என்பதால் போட்டியை கடைசிவரை எடுத்துச்சென்றால் வென்றுவிடலாம் என்று தெரிந்த வில்லியம்சன், நிதானமாகவும் சிறப்பாகவும் ஆடி கொஞ்சம் கொஞ்சமாக ரன்களை சேர்த்தார். 

உலக கோப்பையில் நியூசிலாந்து அணியின் ஆதிக்கம் தொடரும் நிலையில், தென்னாப்பிரிக்காவின் சோகம் தொடர்கிறது. 

நியூசிலாந்து தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டி மழை காரணமாக ஒன்றரை மணி நேரம் தாமதமாக தொடங்கப்பட்டது. எனவே ஒரு ஓவர் குறைக்கப்பட்டு 49 ஓவர்கள் நிர்ணயிக்கப்பட்டன. முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணி, 49 ஓவர் முடிவில் 241 ரன்கள் அடித்தது. 

242 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் முன்ரோ, கப்டில், டெய்லர், லதாம் என ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிய மறுமுனையில் கேப்டன் வில்லியம்சன் அவசரப்படாமல் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தார். ஜேம்ஸ் நீஷம் வில்லியம்சனுக்கு ஒத்துழைப்பு கொடுத்து சிறப்பாக ஆடினார். ஆனால் அவரும் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

விக்கெட்டுகள் சரிந்தாலும் வில்லியம்சன் அவசரமோ பதற்றமோ அடையவில்லை. இலக்கு ரொம்ப கடினமானது இல்லை என்பதால் போட்டியை கடைசிவரை எடுத்துச்சென்றால் வென்றுவிடலாம் என்று தெரிந்த வில்லியம்சன், நிதானமாகவும் சிறப்பாகவும் ஆடி கொஞ்சம் கொஞ்சமாக ரன்களை சேர்த்தார். நீஷமின் விக்கெட்டுக்கு பிறகு களத்திற்கு வந்த டி கிராண்ட் ஹோம் அதிரடியாக ஆடி ரன்களை குவித்து வில்லியம்சனுக்கு உறுதுணையாக இருந்தார். அரைசதம் அடித்த டி கிராண்ட் ஹோம் 47 பந்துகளில் 60 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். 

வில்லியம்சன் ஒரு முனையில் நிலைத்து நிற்க, மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தன. வில்லியம்சன் ஒருவரை வீழ்த்திவிட்டால் வென்றுவிடலாம் என்ற நிலையில் இருந்த தென்னாப்பிரிக்க அணி, அதற்கு கிடைத்த ஒரு அரிய வாய்ப்பை தவறவிட்டது. இம்ரான் தாஹிரிடம் பலமுறை விக்கெட்டை பறிகொடுத்திருக்கும் வில்லியம்சன், இந்தமுறை அவரது பவுலிங்கை மிக கவனமாக ஆடினார். எந்த சூழலிலும் தாஹிரின் பந்தை அடித்து ஆட முயற்சிக்கவில்லை. 

ஆனால் தாஹிரின் கடைசி ஓவரின் கடைசி பந்தில் வீழ்ந்திருக்க வேண்டியவர் வில்லியம்சன். நியூசிலாந்து இன்னிங்ஸின் 38வது ஓவரை தனது கடைசி ஓவராக வீசினார் தாஹிர். அந்த ஓவரின் கடைசி பந்து வில்லியம்சன் பேட்டில் பட்டு விக்கெட் கீப்பரிடம் சென்றது. அதை டி காக் எந்த தவறும் செய்யாமல் கேட்ச் பிடித்தார். தாஹிர் பயங்கரமாக அப்பீல் செய்ய, டி காக் பெரியளவில் கண்டுக்காமல் இருந்தார். 

தாஹிர் ரிவியூ கேட்கலாமா என்பதுபோல் டி காக்கை பார்க்க, டி காக் அதற்கும் ரெஸ்பான்ஸ் செய்யவில்லை. விக்கெட் கீப்பர் டி காக் கண்டுகொள்ளாததால் கேப்டன் டுப்ளெசிஸும் வாளாவிருந்தார். அதனால் ரிவியூ கேட்கவில்லை. அதன்பின்னர் ரிப்ளேவில் அது அவுட்டுதான் என்பது தெரிந்தது. அந்த தருணத்தில் வில்லியம்சன் 70 ரன்களை கடந்து ஆடிக்கொண்டிருந்தார்.

அந்த ரிவியூவை எடுத்திருந்தால் வில்லியம்சன் வெளியேறியிருப்பார். அதன்பின்னர் டி கிராண்ட் ஹோமை தவிர நியூசிலாந்து அணியில் பேட்ஸ்மேன் இல்லை. எனவே தென்னாப்பிரிக்க அணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. இந்த சம்பவம் நடந்த பிறகு வெறும் 11 ஓவர்கள் தான் இருந்தன. அப்படியிருக்கையில், முக்கியமான நேரத்தில் முக்கியமான வீரரின் விக்கெட்டுக்காக அந்த ரிவியூவை எடுப்பதில் தவறில்லை. அது அவுட்டாக இல்லையென்றாலும் பரவாயில்லை. ஆனால் அந்த நேரத்தில் அந்த ரிவியூவை எடுப்பதே சரியான முடிவாக இருக்கும். கடைசி நேரத்தில் நெருக்கடியான மற்றும் முக்கியமான சூழலில் கூட அந்த ரிவியூவை எடுக்காமல் வைத்து அதை என்ன வீட்டுக்கா எடுத்துகிட்டு போக போறோம் என்பதைக்கூட யோசிக்காமல் தேவையில்லாமல் வில்லியம்சனின் விக்கெட்டையும் விட்டு வெற்றியையும் பறிகொடுத்துவிட்டது தென்னாப்பிரிக்க அணி. 
 

click me!