இலங்கையை தெறிக்கவிட்டு தென்னாப்பிரிக்கா அபார வெற்றி

By karthikeyan VFirst Published May 25, 2019, 12:48 PM IST
Highlights

உலக கோப்பை வரும் 30ம் தேதி தொடங்க உள்ள நிலையில், பயிற்சி போட்டியில் இலங்கை அணியை எளிதாக வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது. 

உலக கோப்பை வரும் 30ம் தேதி தொடங்க உள்ள நிலையில், பயிற்சி போட்டிகள் நடந்துவருகின்றன. 

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. மற்றொரு போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் மோதின.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் ஹாசிம் ஆம்லா மற்றும் கேப்டன் டுபிளெசிஸ் ஆகிய இருவரும் அபாரமாக ஆடி ரன்களை சேர்த்தனர். ஆம்லா 65 ரன்களும் டுபிளெசிஸ் 88 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் பின்வரிசை வீரர்களான ஃபெலுக்வாயோ, ப்ரிடோரியஸ், கிறிஸ் மோரிஸ் ஆகியோர் ஓரளவிற்கு பங்களிப்பு செய்ய 50 ஓவர் முடிவில் தென்னாப்பிரிக்க அணி, 338 ரன்களை குவித்தது. 

339 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில் கேப்டன் கருணரத்னே மற்றும் சீனியர் வீரர் மேத்யூஸ் ஆகிய இருவரை தவிர மற்ற யாருமே சோபிக்கவில்லை. கருணரத்னே 87 ரன்களும் மேத்யூஸ் 64 ரன்களும் அடித்தனர். அவர்களை தவிர மற்ற அனைவருமே சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்து வரிசையாக வெளியேறினர். 43வது ஓவரில் 253 ரன்களுக்கே இலங்கை அணி ஆல் அவுட்டானது. 87 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது. 
 

click me!