பயிற்சி போட்டியில் பாகிஸ்தானை பந்தாடி ஆஃப்கானிஸ்தான் வெற்றி.. பல்லு புடுங்குன பாம்பு ஆயிடுச்சு பாகிஸ்தான் டீம்

By karthikeyan VFirst Published May 25, 2019, 11:46 AM IST
Highlights

பாகிஸ்தான் அணியின் பேட்டிங் நன்றாக இருந்த நிலையில், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் மோசமாக இருந்தது. இங்கிலாந்துக்கு எதிராக ஆடிய ஒருநாள் தொடரில் பவுலிங் மோசமாக இருந்ததால், உலக கோப்பை அணியில் அதிரடியாக மாற்றங்கள் செய்யப்பட்டன. 
 

உலக கோப்பை 2019 தொடரில் அரையிறுதிக்கு முன்னேறும் 4 அணிகளில் பாகிஸ்தானும் இருக்கும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. 

பாகிஸ்தான் அணியின் பேட்டிங் நன்றாக இருந்த நிலையில், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் மோசமாக இருந்தது. இங்கிலாந்துக்கு எதிராக ஆடிய ஒருநாள் தொடரில் பவுலிங் மோசமாக இருந்ததால், உலக கோப்பை அணியில் அதிரடியாக மாற்றங்கள் செய்யப்பட்டன. 

ஜுனைத் கானுக்கு பதிலாக வஹாப் ரியாஸும் ஃபஹீம் அஷ்ரஃபுக்கு பதிலாக முகமது அமீரும் எடுக்கப்பட்டனர். இங்கிலாந்துக்கு எதிராக தொடர்ச்சியாக 3 போட்டிகளில் 340 ரன்களுக்கு மேல் அடித்தும் கூட 4 போட்டிகளிலும் தோற்று ஒயிட் வாஷ் ஆனது பாகிஸ்தான். 

நேற்று நடந்த பயிற்சி போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி தோல்வியடைந்துள்ளது. தங்களை எளிதாக எடைபோடக்கூடாது என்பதை மீண்டுமொரு முறை எதிரணிகளுக்கு அழுத்தம் திருத்தமாக நிரூபித்துள்ளது ஆஃப்கானிஸ்தான் அணி. 

ஆசிய கோப்பையில் அனைத்து அணிகளையும் எளிதாக வீழ்த்திய இந்திய அணி, ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை டிரா தான் செய்தது. அப்போதே ஆஃப்கானிஸ்தான் அணி உலக கோப்பையில் எதிரணிகளுக்கு செம டஃப் கொடுக்கும் என்பது தெரிந்துவிட்டது.

இந்நிலையில், நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியில் பாபர் அசாமும் ஷோயப் மாலிக்கும் மட்டுமே நன்றாக ஆடினர். பாபர் அசாம் 112 ரன்களை குவித்து அசத்தினார். மாலிக் 44 ரன்கள் அடித்தார். இவர்களை தவிர மற்ற அனைவரையும் சொற்ப ரன்களில் வீழ்த்தியது ஆஃப்கானிஸ்தான் அணி. 

ஷோயப் மாலிக்கின் விக்கெட்டுக்கு பிறகு, சரியாக அடுத்த 10 ஓவர்களில் 59 ரன்களுக்கு எஞ்சிய 5 விக்கெட்டுகளை இழந்து 48வது ஓவரில் 262 ரன்களுக்கு ஆல் அவுட்டானது பாகிஸ்தான். ஆஃப்கானிஸ்தான் அணியின் ஸ்பின்னர்களான முகமது நபி மற்றும் ரஷீத் கான் ஆகிய இருவரும் அபாரமாக பந்துவீசி பாகிஸ்தான் அணியை கட்டுப்படுத்தினர். இருவரும் இணைந்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

263 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரரான ஹஸ்ரதுல்லா ஷேஷாய் அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். 28 பந்துகளில் 49 ரன்களில் ஆட்டமிழந்து, ஒரு ரன்னில் அரைசதத்தை தவறவிட்டார். அவர் அமைத்து கொடுத்த தொடக்கத்தால் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு நெருக்கடி குறைந்தது. பின்னர் ஹஷ்மதுல்லா மற்றும் முகமது நபி ஆகிய இருவரும் இணைந்து சிறப்பாக ஆடி அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர். 

முகமது நபி 34 ரன்களில் ஆட்டமிழக்க, வஹாப் ரியாஸ், 46 மற்றும் 48வது ஓவர்களை அபாரமாக வீசினார். எனினும் ஹஷ்மதுல்லா கடைசிவரை களத்தில் நின்று 74 ரன்களை குவித்து ஆஃப்கானிஸ்தான் அணியை வெற்றி பெற செய்தார். கடைசி ஓவரில் இலக்கை எட்டிய ஆஃப்கானிஸ்தான் அணி, 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. 

பயிற்சி போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது, ஆஃப்கானிஸ்தான் அணியின் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது. 
 

click me!