IND vs SA: மில்லர்-வாண்டர் டசன் அதிரடி அரைசதம்! முதல் டி20யில் இந்தியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி

By karthikeyan VFirst Published Jun 9, 2022, 10:38 PM IST
Highlights

டேவிட் மில்லர் மற்றும் வாண்டர் டசனின் அதிரடி அரைசதங்களால் 212 ரன்கள் என்ற இலக்கை எளிதாக அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது தென்னாப்பிரிக்க அணி.
 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டி டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணி:

ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்ஸர் படேல், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், ஆவேஷ் கான்.

தென்னாப்பிரிக்க அணி:

குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), டெம்பா பவுமா (கேப்டன்), ரீஸா ஹென்ரிக்ஸ், டேவிட் மில்லர், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், வெய்ன் பர்னெல், ட்வைன் பிரிட்டோரியஸ், கேஷவ் மஹராஜ், டப்ரைஸ் ஷாம்ஸி, ககிசோ ரபாடா, அன்ரிக் நோர்க்யா.

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த இஷான் கிஷன், கேஷவ் மஹராஜின் ஒரே ஓவரில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் பறக்கவிட்டார். அந்த ஒரே ஓவரில் ஸ்கோரை மளமளவென உயர்த்திவிட்டார்.

48 பந்தில் 76 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார் இஷான் கிஷன். ஷ்ரேயாஸ் ஐயர் அடித்து ஆடி 27 பந்தில் 36 ரன்கள் அடித்தார். ரிஷப் பண்ட் 16 பந்தில் 29 ரன்கள் அடித்தார். டெத் ஓவர்களில் அடித்து ஆடிய ஹர்திக் பாண்டியா 12 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 31 ரன்கள் அடித்தார் பாண்டியா. இஷான் கிஷனின் அதிரடி அரைசதம், ஹர்திக் பாண்டியாவின் காட்டடி ஃபினிஷிங்கால் 20 ஓவரில் 211 ரன்களை குவித்தது இந்திய அணி.

212 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான டெம்பா பவுமா 10 ரன்னிலும், குயிண்டன் டி காக் 22 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 3ம் வரிசையில் இறக்கிவிடப்பட்ட ட்வைன் பிரிட்டோரியஸ் 13  பந்தில் 29 ரன்கள் அடித்து தனது ரோலை செவ்வனே செய்தார்.

அதன்பின்னர் டேவிட் மில்லரும் வாண்டர் டசனும் இணைந்து இந்திய அணியின் பவுலிங்கை அடித்து நொறுக்கிவிட்டனர். ஸ்பின், ஃபாஸ்ட் ஆகிய 2 பவுலிங்கையும் பொளந்துகட்டி அரைசதம் அடித்தனர். அரைசதம் அடித்த பின்னரும் பொறுப்புடன் ஆடி கடைசி வரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தனர். டேவிட் மில்லர் 31 பந்தில் 64 ரன்களையும், வாண்டர் டசன் 46 பந்தில் 75 ரன்களையும் குவித்தனர். இவர்களது அதிரடியான பேட்டிங்கால் கடைசி ஓவரின் முதல் பந்தில் இலக்கை அடித்து தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. 
 

click me!