ஹர்திக் பாண்டியா தான் இந்திய அணியின் அடுத்த கேப்டன்..! ஹர்பஜன் சிங் கருத்து

By karthikeyan VFirst Published Jun 9, 2022, 9:04 PM IST
Highlights

ஹர்திக் பாண்டியா இந்திய அணியை கண்டிப்பாக வழிநடத்துவார் என்று ஹர்பஜன் சிங் கருத்து கூறியுள்ளார்.
 

ஐபிஎல் 15வது சீசனில் முதல் முறையாக களமிறங்கிய ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி அறிமுக சீசனிலேயே கோப்பையை வென்றது. 

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக முழு ஃபிட்னெஸுடன் இல்லாமல் தவித்து, இந்திய அணியில் தனக்கான இடத்தையும் இழந்த ஹர்திக் பாண்டியா மீது இந்த ஐபிஎல் சீசனில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. அதை ஈடுகட்டும் விதமாக பேட்டிங், பவுலிங், கேப்டன்சி என அனைத்திலும் தன்னை நிரூபித்து மீண்டும் இந்திய அணியில் இடத்தையும் பிடித்தார்.

பேட்டிங், பவுலிங்கில் பாண்டியா அசத்தியது பெரிய விஷயமல்ல. ஆனால் கேப்டன்சி அனுபவமே இல்லாத பாண்டியா, இந்த சீசனில் முதிர்ச்சியுடனும் பக்குவத்துடனும் தெளிவான கேப்டன்சி செய்தது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. பொதுவாக ஆக்ரோஷமான குணாதிசயத்தை கொண்ட ஹர்திக் பாண்டியா, இந்த சீசனில் கேப்டனாக செயல்பட்ட நிலையில், அவரது உணர்ச்சிகளை பெரிதாக வெளிப்படுத்தவில்லை. அமைதியாக, நிதானமாகவே செயல்பட்டார்.

களவியூகம், வீரர்களை கையாண்ட விதம், ஃபீல்டிங் செட்டப், கேரக்டர் என அனைத்திலுமே ஒரு தேர்ந்த கேப்டனாக தெரிந்தார். ரோஹித் சர்மாவுக்கு அடுத்து இந்திய அணியின் கேப்டனுக்கான ரேஸில் கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் இருக்கும் நிலையில், அவர்களை ஓவர்டேக் செய்து ஹர்திக் பாண்டியா தனது பெயரை பதிவு செய்துள்ளார்.

அந்தளவிற்கு ஒரு கேப்டனாக மிகச்சிறப்பாக செயல்பட்டார். ஒரு கேப்டனாக முன்னாள் வீரர்கள் பலரையும் கவர்ந்தார் ஹர்திக் பாண்டியா. ரோஹித் சர்மாவிற்கு பிறகு ஹர்திக் பாண்டியா தான் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்கவேண்டும் என்று பல முன்னாள் ஜாம்பவான்கள் வலியுறுத்திவருகின்றனர்.

ஆனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் ரோஹித் சர்மாவிற்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையில், கேஎல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டார். கேஎல் ராகுல் காயத்தால் வெளியேறியபோதிலும், ரிஷப் பண்ட் தான் கேப்டனாக நியமிக்கப்பட்டாரே தவிர, ஹர்திக் பாண்டியா அல்ல. ஆனால் ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள ஹர்பஜன் சிங், முதுகுப்பகுதியில் காயம் காரணமாக தவித்துவந்த ஹர்திக் பாண்டியா, கடினமான உழைப்பின் மூலம் செம கம்பேக் கொடுத்துள்ளார். ஒரு வீரராக மட்டுமல்லாது, ஒரு கேப்டனாகவும் அசத்தினார். குஜராத் டைட்டன்ஸுக்காக ஐபிஎல்லில் அவர் ஆடிய விதம் அபாரமானது. 

கேப்டனாக அறிமுக சீசனிலேயே ஐபிஎல் கோப்பையை குஜராத் டைட்டன்ஸுக்கு வென்று கொடுத்து, கேப்டன்சியில் மிரட்டினார். அவரது நிதானம், பேட்டிங்கில் ஸ்கோர் செய்தது, முக்கியமான ஓவர்களை வீசியது, பொறுப்பை தோள்களில் சுமந்து விளையாடியது என அனைத்து விதத்திலும் அசத்தினார். இதே கடின உழைப்பை அவர் தொடர்வார் என நம்புகிறேன். மேலும் இந்திய அணியின் கேப்டனாக கண்டிப்பாக ஹர்திக் பாண்டியா செயல்படுவார் என்று ஹர்பஜன் சிங் நம்பிக்கை தெரிவித்தார்.
 

click me!