கோலிக்கு எல்லா வகையிலும் குடைச்சல் கொடுக்கும் ஸ்மித்.. ஒரே போட்டியில் தாறுமாறா எகிறிய ஸ்மித்தின் கெத்து

By karthikeyan VFirst Published Aug 7, 2019, 2:27 PM IST
Highlights

ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலுமே சதமடித்து ஆஸ்திரேலிய அணியின் அபார வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார் ஸ்மித். 

விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன், ஜோ ரூட் ஆகிய நால்வரும் சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களாக அறியப்படுகிறார்கள்.

இவர்களில் விராட் கோலி தான் டாப்பில் இருக்கிறார். இவர்கள் நால்வரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்று சொல்வது கடினம். நம்பரின் அடிப்படையில் கோலி தான் டாப். ஆனால் பேட்டிங் திறமை மற்றும் டெக்னிக்கை பொறுத்தமட்டில் நால்வருமே தலைசிறந்தவர்கள் தான். 

பேட்டிங் சாதனைகள் பெரும்பாலும் விராட் கோலியிடமே உள்ளன. இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் சாதனைகளை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டிவருகிறார் ஸ்மித். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தின் எதிரொலியாக ஓராண்டு தடை பெற்ற ஸ்மித், ஒன்றரை ஆண்டுக்கு பிறகு, மீண்டும் களமிறங்கிய முதல் டெஸ்ட் போட்டி ஆஷஸ் போட்டிதான்.

ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலுமே சதமடித்து ஆஸ்திரேலிய அணியின் அபார வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார் ஸ்மித். இந்த போட்டிக்கு முன் 857 புள்ளிகளுடன் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நான்காம் இடத்தில் இருந்த ஸ்மித், ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் 2 சதங்கள் விளாசியதை அடுத்து, 46 புள்ளிகளை பெற்று 903 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் உள்ளார். 

இந்த பட்டியலில் 922 புள்ளிகளுடன் விராட் கோலி முதலிடத்திலும் 913 புள்ளிகளுடன் கேன் வில்லியம்சன் இரண்டாமிடத்திலும் உள்ளனர். அவர்களுக்கு அடுத்த இடத்தில் ஸ்மித் உள்ளார். ஒரே போட்டியில் 46 புள்ளிகளை பெற்றுள்ளார் ஸ்மித். ஆஷஸ் தொடரின் எஞ்சிய 4 போட்டிகளிலும் ஸ்மித் சிறப்பாக ஆடும்பட்சத்தில், விராட் கோலியை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தை பிடிப்பது உறுதி. விராட் கோலியை விட வெறும் 19 புள்ளிகள் தான் ஸ்மித் பின் தங்கியுள்ளார். எனவே ஆஷஸ் தொடரின் எஞ்சிய போட்டிகளில் அபாரமாக ஆடினால் கோலியை பின்னுக்குத் தள்ளிவிடலாம். அதேநேரத்தில் இந்திய அணியும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடுவதால், கோலி அந்த இரண்டு போட்டிகளில் நன்றாக ஆடினால், அவரை ஸ்மித் முந்துவது கடினம். ஆனால் கோலி சொதப்பி, ஸ்மித் அசத்தினால் கோலிக்கு ஆப்புதான். 

ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் சதமடித்த ஸ்மித், டெஸ்ட் கிரிக்கெட்டில் விரைவில் 24 மற்றும் 25 சதங்களை எட்டிய வீரர்கள் பட்டியலில் கோலியை பின்னுக்கு தள்ளி டான் பிராட்மேனுக்கு அடுத்த இரண்டாமிடத்தை பிடித்தார். இப்போது ஐசிசி டெஸ்ட் தரவரிசையிலும் விராட் கோலிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார். 
 

click me!