ஆஷஸ் டெஸ்ட்டில் 2 இன்னிங்ஸிலும் சதம்.. கோலியை தாறுமாறா காலி செய்யும் ஸ்மித்.. சாதனைகளை குவித்து செம கம்பேக் கொடுத்த ஸ்மித்

By karthikeyan VFirst Published Aug 5, 2019, 12:34 PM IST
Highlights

ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலுமே சதமடித்து டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு ஒன்றரை ஆண்டுக்கு பிறகு செம கம்பேக் கொடுத்துள்ளார் ஸ்மித். 

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் தொடரின் முதல் போட்டி பர்மிங்காமில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 284 ரன்கள் அடித்தது. 

ஆஸ்திரேலிய அணியின் எந்த பேட்ஸ்மேனும் முதல் இன்னிங்ஸில் சோபிக்காத நிலையில், ஸ்மித் தனி ஒரு ஆளாக நின்று பொறுப்புடன் ஆடி சதமடித்து ஆஸ்திரேலிய அணியை காப்பாற்றினார். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் அடித்த 284 ரன்களில் 144 ரன்கள் ஸ்மித் அடித்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 374 ரன்களை குவித்தது. 90 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணியை மீண்டும் தூக்கி நிறுத்தினார் ஸ்மித். ஸ்மித் இரண்டாவது இன்னிங்ஸிலும் சிறப்பாக ஆடி சதமடித்தார். முதல் இன்னிங்ஸில் 144 ரன்கள் அடித்த ஸ்மித், இரண்டாவது இன்னிங்ஸில் 142 ரன்களை குவித்தார். ஸ்மித் மற்றும் மேத்யூ வேடின் சதத்தால் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 487 ரன்களை குவித்தது. 

வெற்றிக்கு 398 ரன்கள் தேவை என்ற நிலையில், நான்காம் நாள் ஆட்டநேர முடிவிற்கு முன்னதாக இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி, ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 13 ரன்கள் எடுத்தது. கடைசி நாளான இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 385 ரன்கள் தேவை. ஆஸ்திரேலியாவிற்கு 10 விக்கெட்டுகள் தேவை. இவை இரண்டுமே நடக்கவில்லையென்றால் போட்டி டிரா ஆகிவிடும். 

இந்த போட்டியில் இரண்டு சதங்களை அடித்த ஸ்மித், பல சாதனைகளை குவித்துள்ளார். 

1. இந்த போட்டியில் ஸ்மித் அடித்த 2 சதங்களுடன் சேர்த்து இதுவரை ஆஷஸ் தொடரில் 10 சதங்களை அடித்துள்ளார். இதன்மூலம் ஆஷஸ் தொடரில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் டான் பிராட்மேன்(19 சதங்கள்), ஜாக் ஹோப்ஸ்(12 சதங்கள்) ஆகியோருக்கு அடுத்த இடத்தில் ஸ்மித் உள்ளார். மூன்றாமிடத்தில் இருக்கும் 10 சதங்களுடன் இருக்கும் ஸ்டீவ் வாக்குடன் அந்த இடத்தை ஸ்மித் பகிர்ந்துள்ளார். 

2. டெஸ்ட் கிரிக்கெட்டில் விரைவில் 25 சதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலியின் சாதனையை முறியடித்து டான் பிராட்மேனுக்கு அடுத்த இடத்தில் ஸ்மித் உள்ளார். பிராட்மேன் வெறும் 68 இன்னிங்ஸ்களில் 25 சதங்கள் என்ற மைல்கல்லை எட்டினார். விராட் கோலி 127 இன்னிங்ஸ்களில் 25 சதங்களை விளாசி இரண்டாமிடத்தில் இருந்தார். 119 இன்னிங்ஸ்களிலேயே 25 சதங்களை அடித்து கோலியை பின்னுக்குத்தள்ளி இரண்டாமிடத்தை பிடித்தார் ஸ்மித். இந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர்(130 இன்னிங்ஸ்) நான்காமிடத்தில் உள்ளார். 

ஒன்றரை ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு திரும்பிவந்துள்ள ஸ்மித், முதல் போட்டியிலேயே இரண்டு இன்னிங்ஸிலும் சதமடித்து அசத்தியுள்ளார். சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரரும் சாதனைகளின் நாயகனாக திகழும் கோலியின் சாதனைகளையும் தகர்த்தெறிந்து கொண்டிருக்கிறார் ஸ்மித். 
 

click me!