சேர்க்கைக்கு அர்த்தம் சேர்த்த ஷ்ரேயாஸ் ஐயர்.. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரா பொறுப்பான பேட்டிங்

By karthikeyan VFirst Published Aug 12, 2019, 11:13 AM IST
Highlights

ரிஷப் பண்ட்டின் விக்கெட்டுக்கு பிறகு ஐந்தாவது வீரராக களமிறங்கினார் ஷ்ரேயாஸ் ஐயர். மிடில் ஆர்டர் வீரர் செய்ய வேண்டிய பார்ட்னர்ஷிப் அமைக்கும் பணியை செவ்வனே செய்தார் ஷ்ரேயாஸ். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி டி.எல்.எஸ் முறைப்படி 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்திய அணியின் மிடில் ஆர்டர் சிக்கலுக்கு தீர்வு காணும் விதமாக ஷ்ரேயாஸ் ஐயர், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மீண்டும் அணியில் இடம்பிடித்தார். முதல் போட்டி மழையால் ரத்தானதால் ஷ்ரேயாஸ் ஐயரால் ஆடமுடியவில்லை.

இந்நிலையில், இரண்டாவது போட்டியில் சிறப்பாக ஆடினார். போர்ட் ஆஃப் ஸ்பெய்னில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித்தும் தவானும் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதையடுத்து நான்காம் வரிசையில் ரிஷப் பண்ட் இறக்கப்பட்டார். அவர் 34 பந்துகள் ஆடி 20 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட் தொடர்ச்சியாக ஏமாற்றமளித்துவருகிறார். ஆனால் அவர் தான் இந்திய அணியின் அடுத்த விக்கெட் கீப்பர் என்று அணி நிர்வாகம் உறுதி செய்துவிட்டதால், அவருக்கு நெருக்கடி கொடுக்காமல் நிறைய வாய்ப்புகள் வழங்கப்படும் என்பதை கேப்டன் கோலி ஏற்கனவே உறுதி செய்துவிட்டார். 

ரிஷப் பண்ட்டின் விக்கெட்டுக்கு பிறகு ஐந்தாவது வீரராக களமிறங்கினார் ஷ்ரேயாஸ் ஐயர். மிடில் ஆர்டர் வீரர் செய்ய வேண்டிய பார்ட்னர்ஷிப் அமைக்கும் பணியை செவ்வனே செய்தார் ஷ்ரேயாஸ். களத்திற்கு வந்தது முதலே கவனமாகவும் அதேநேரத்தில் பந்துகளை வீணடிக்காமல் அடித்தும் ஆடினார் ஷ்ரேயாஸ் ஐயர். கோலி - ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 125 ரன்களை குவித்தனர்.

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஒரு அணிக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செவ்வனே செய்து அணி நிர்வாகத்திற்கு நம்பிக்கையளித்தார் ஷ்ரேயாஸ் ஐயர். 68 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 71 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இந்திய அணியில் தனது சேர்க்கையை, சிறப்பான பேட்டிங்கின் மூலம் நியாயப்படுத்தியுள்ளார் ஷ்ரேயாஸ் ஐயர். 

click me!