ஷோயப் மாலிக் 18 பந்தில் அரைசதம்; 40 வயதிலும் காட்டடி பேட்டிங்! ஸ்காட்லாந்துக்கு கடின இலக்கை நிர்ணயித்த பாக்.,

By karthikeyan VFirst Published Nov 7, 2021, 9:26 PM IST
Highlights

ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் பாபர் அசாமின் பொறுப்பான அரைசதம் மற்றும் ஷோயப் மாலிக்கின் அதிரடி அரைசதம் ஆகியவற்றால் 20 ஓவரில் 189 ரன்களை குவித்த பாகிஸ்தான் அணி, 190 ரன்கள் என்ற மிகக்கடின இலக்கை ஸ்காட்லாந்துக்கு நிர்ணயித்துள்ளது.
 

டி20 உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. சூப்பர் 12 சுற்று போட்டிகள் நாளையுடன் முடிகின்றன. க்ரூப் 1-ல் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. க்ரூப் 2-ல் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து அணி 4வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது.

4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட நிலையில், புள்ளி பட்டியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத போட்டி இன்றும் நாளையும் நடக்கிறது. இன்று ஷார்ஜாவில் நடக்கும் போட்டியில் பாகிஸ்தானும் ஸ்காட்லாந்தும் மோதுகின்றன.

ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட பாகிஸ்தான் அணி இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடியது.

பாகிஸ்தான் அணி:

முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), பாபர் அசாம் (கேப்டன்), ஃபகர் ஜமான், முகமது ஹஃபீஸ், ஷோயப் மாலிக், ஆசிஃப் அலி, ஷதாப் கான், இமாத் வாசிம், ஹசன் அலி, ஹாரிஸ் ரான், ஷாஹீன் அஃப்ரிடி.

ஸ்காட்லாந்து அணி:

ஜார்ஜ் முன்சி, கைல் கோயட்ஸர் (கேப்டன்), மேத்யூ க்ராஸ் (விக்கெட் கீப்பர்), ரிச்சி பெரிங்டன், டைலன் பட்ஜ், மைக்கேல் லீஸ்க், கிறிஸ் க்ரீவ்ஸ், மார்க் வாட், ஹம்ஸா தாஹிர், சாஃபியான் ஷாரிஃப், பிராட்லி வீல்.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் 15 ரன்னிலும், அவரைத்தொடர்ந்து ஃபகர் ஜமான் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஒருமுனையில் நிலைத்து நின்று அருமையாக ஆடிய கேப்டனும் தொடக்க வீரருமான பாபர் அசாம் அரைசதம் அடித்தார். அவருடன் இணைந்து 3வது விக்கெட்டுக்கு நன்றாக ஆடிய முகமது ஹஃபீஸ் 19 பந்தில் 31 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

அவரைத்தொடர்ந்து அரைசதம் அடித்த  பாபர் அசாமும் 66 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். டெத் ஓவர்களில் களத்திற்கு வந்த ஷோயப் மாலிக், 40 வயதிலும் அடி வெளுத்து வாங்கினார். அதிரடியாக ஆடி சிக்ஸர்களாக விளாசிய ஷோயப் மாலிக், வெறும் 18 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்களுடன் 54 ரன்களை குவித்தார். ஷோயப் மாலிக்கின் கடைசி நேர காட்டடியால் 20 ஓவரில் 189 ரன்களை குவித்த பாகிஸ்தான் அணி, 190 ரன்கள் என்ற கடின இலக்கை ஸ்காட்லாந்துக்கு நிர்ணயித்துள்ளது.
 

click me!