தோனியின் அதிரடி பேட்டிங்கை சமாளிக்க முடியாத விரக்தியில் அத்துமீறிய அக்தர்..! பின்னர் மன்னிப்பு கேட்ட சம்பவம்

By karthikeyan VFirst Published Aug 9, 2020, 5:17 PM IST
Highlights

தோனிக்கு வேண்டுமென்றே இடுப்புக்கு மேல் ஃபுல் டாஸ் வீசி மிரட்டியதாகவும் அதன்பின்னர் அவரிடம் மன்னிப்பு கேட்டதாகவும் ஷோயப் அக்தர் தெரிவித்துள்ளார். 
 

பாகிஸ்தான் அணியின் ஆல்டைம் சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களில் ஷோயப் அக்தரும் ஒருவர். 150 கிமீ வேகத்திற்கு மேல் அசால்ட்டாக வீசக்கூடிய மிரட்டலான ஃபாஸ்ட் பவுலர் அக்தர். தனது கெரியரில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சேவாக், ரிக்கி பாண்டிங், ஜெயசூரியா, பிரயன் லாரா, சங்கக்கரா, ஜெயவர்தனே ஆகிய பல சிறந்த வீரர்களுக்கு பந்துவீசி, தனது அபாரமான வேகத்தின் மூலம் அவர்களையெல்லாம் மிரட்டியவர் அக்தர். 

இந்நிலையில், அக்தர் தோனிக்கு வேண்டுமென்றே இடுப்புக்கு மேல் ஃபுல் டாஸ் வீசியதாகவும் அதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டதாகவும், தனது கெரியரில் நடந்த முக்கியமான ஒரு சம்பவம் குறித்து பகிர்ந்துள்ளார். 

ஆகாஷ் சோப்ராவின் யூடியூப் சேனலுக்கு பேசிய அக்தர் இந்த தகவலை தெரிவித்தார். 2006ம் ஆண்டு இந்திய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து ஆடியது. அந்த டெஸ்ட் தொடரில் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தோனி அபாரமாக ஆடி 19 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 148 ரன்களை குவித்தார். ஃபைஸலாபாத்தில் நடந்த அந்த டெஸ்ட்டில் தோனி அடித்ததுதான், அவரது முதல் டெஸ்ட் சதம் ஆகும். 

அந்த போட்டியில் இளம் தோனியின் அதிரடி பேட்டிங்கை கட்டுப்படுத்தவும் முடியாமல், அவரை அவுட்டும் ஆக்க முடியாமல் கடுப்பான அக்தர், வேண்டுமென்றே இடுப்புக்கு மேல் ஃபுல் டாஸ் வீசினார். அந்த சம்பவம் குறித்துத்தான் பேசியுள்ளார். 

இதுகுறித்து பேசிய அக்தர்,  ஃபைசலாபாத் டெஸ்ட்டில், ஒவ்வொரு ஸ்பெல்லிலும் 8-9 ஓவர்கள் வீசினேன். தோனி அந்த போட்டியில் சிறப்பாக ஆடி சதமடித்தார். அந்த போட்டியில் தோனிக்கு வேண்டுமென்றே தான் பீமர்(இடுப்புக்கு மேல் ஃபுல்டாஸ் வீசுவது) பந்தை வீசினேன். பின்னர் அவரிடம் மன்னிப்பு கேட்டேன். என் கெரியரில் முதல் முறையாக தோனிக்குத்தான் வேண்டுமென்றே பீமர் வீசினேன். அதற்கு முன் யாருக்குமே வேண்டுமென்று பீமர் வீசியதில்லை. அதனால் சம்பவத்திற்கு பின்னர் அவரிடம் மன்னிப்பு கேட்டேன்.

தோனிக்கு பீமர் வீசியதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். ஃபைசலாபாத் ஆடுகளத்தில், நான் எவ்வளவு வேகமாக பந்துவீசினாலும் பந்து மெதுவாகவே சென்றது. விக்கெட் ரொம்ப மெதுவாக இருந்ததால், நான் நல்ல வேகமாக வீசிய பந்துகளை கூட தோனி பவுண்டரிகள் விளாசினார். அதனால் விரக்தியும் கோபமும் அடைந்தேன். அதனால் தான் வேண்டுமென்றே பீமர் வீசினேன் என்று அக்தர் தெரிவித்துள்ளார். 

click me!