என் பவுன்ஸரில் முகத்தில் பலத்த அடி; நிலைகுலைந்து ஸ்டம்ப் மேல் விழுந்த வீரர்.! செத்துட்டார்னு நினைத்த அக்தர்

By karthikeyan VFirst Published Aug 20, 2020, 8:12 PM IST
Highlights

தனது அதிவேக பவுன்ஸரில் இங்கிலாந்து வீரர் ஒருவர் கவுண்டி போட்டி ஒன்றில் ஸ்டம்பின் மீது விழுந்த சம்பவம் குறித்து பகிர்ந்துள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் அக்தர்.
 

பாகிஸ்தான் அணியின் ஆல்டைம் சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களில் ஷோயப் அக்தரும் ஒருவர். 150 கிமீ வேகத்திற்கு மேல் அசால்ட்டாக வீசக்கூடிய மிரட்டலான ஃபாஸ்ட் பவுலர் அக்தர். தனது கெரியரில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சேவாக், ரிக்கி பாண்டிங், ஜெயசூரியா, பிரயன் லாரா, சங்கக்கரா, ஜெயவர்தனே ஆகிய பல சிறந்த வீரர்களுக்கு பந்துவீசி, தனது அபாரமான வேகத்தின் மூலம் அவர்களையெல்லாம் மிரட்டியவர் அக்தர். 

அக்தர் தனது அதிவேக பவுன்ஸர்கள் மூலம் பல சிறந்த பேட்ஸ்மேன்களை சர்வதேச கிரிக்கெட்டில் தெறிக்கவிட்டுள்ளார். அந்தவகையில், இங்கிலாந்தில் நடக்கு கவுண்டி கிரிக்கெட்டில், வோர்செஸ்டைர் அணிக்காக ஆடியபோது, அக்தரின் பவுன்ஸரில் மேத்யூ மேனார்டு என்ற வீரர் முகத்தில் அடி வாங்கி ஸ்டம்பின் மீது சரிந்து விழுந்தார். அந்த அடியில், மேத்யூ மேனார்டு இறந்தே விட்டதாக நினைத்ததாக அக்தர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய அக்தர்,  கவுண்டி கிரிக்கெட்டில் வோர்செஸ்டெர்ஷைர் அணிக்காக நான் ஆடியபோது, சில பேட்ஸ்மேன்களை பவுலிங்கின் மூலம் தாக்கியிருக்கிறேன். தாக்கிய பின்னர், அடக்கடவுளே, தவறு இழைத்துவிட்டேனே என்று தோன்றும். 

கவுண்டி கிரிக்கெட்டில் நடந்த ஒரு சம்பவம் எனக்கு நினைவிருக்கிறது. கவுண்டி போட்டியின்போது, ஒரு மாலையில் வெளிச்சம் குறைவாக இருந்தது. இந்த வெளிச்சத்தில் உங்களால் எனது வேகப்பந்தை சரியாக கவனித்து ஆடமுடியாது; நீங்கள் விரும்பினால் நாம் தொடரலாம் என்று மேத்யூ மேனார்டிடம் சொன்னேன். அவர் அந்த வெளிச்சத்தில் எனது பவுலிங்கை ஆட தயாராக இருந்தார். அரௌண்ட் தி விக்கெட்டில் வந்து ஒரு ஃபாஸ்ட் பவுன்ஸரை வீசினேன். அந்த பவுன்ஸர் அவரது முகத்தை தாக்கியது. முகத்தில் அடிவாங்கிய மேத்யூ மேனார்டு, நிலைகுலைந்து ஸ்டம்பில் விழுந்தார். அவர் விழுந்ததை பார்த்து செத்தேவிட்டார் என்று நினைத்தேன். இதுமாதிரி பவுன்ஸர்களை வீசிவிட்டு வருந்துவேன் என்று அக்தர் தெரிவித்துள்ளார். 

மேத்யூ மேனார்டு என்ற அந்த பேட்ஸ்மேன், முதல் தர கிரிக்கெட்டில் 38 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். 1988லிருந்து 2000ம் ஆண்டுவரை இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணிக்காக 4 டெஸ்ட் மற்றும் 14 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!