இந்தியா - பாகிஸ்தான் ஃபைனலில் மோதணும்.. அப்பதானே மறுபடியும் இந்தியாவை தோற்கடிக்கலாம்..! அக்தர் ஆணவ பேச்சு

By karthikeyan VFirst Published Nov 6, 2021, 3:05 PM IST
Highlights

டி20 உலக கோப்பை ஃபைனலில் இந்தியாவும் பாகிஸ்தானும் தான் மோத வேண்டும்; அப்போதுதானே இந்தியாவை மீண்டும் பாகிஸ்தானால் வீழ்த்த முடியும் என்று ஆணவமாக பேசியுள்ளார் ஷோயப் அக்தர்.
 

டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. க்ரூப் 1-ல் இங்கிலாந்து அணியும், க்ரூப் 2-ல் பாகிஸ்தான் அணியும் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டன. க்ரூப் 1-லிருந்து அரையிறுதிக்கு 2வது அணியாக முன்னேற, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. க்ரூப் 2-ல் நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய 3 அணிகளுக்குமே வாய்ப்புள்ளது.

ஸ்காட்லாந்துக்கு எதிரான அபார வெற்றியின் மூலம், நெட் ரன்ரேட்டில் ஆஃப்கானிஸ்தானை முந்திவிட்டது இந்திய அணி. இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் தலா 4 புள்ளிகளை பெற்றுள்ளன. நியூசிலாந்து அணி 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது. அனைத்து அணிகளுக்குமே தலா ஒரு போட்டி மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், இந்திய அணி கடைசி போட்டியில் நமீபியாவை கண்டிப்பாக வீழ்த்தி 6 புள்ளிகளை பெற்றுவிடும். எனவே ஆஃப்கானிஸ்தான் அணி நியூசிலாந்தை வீழ்த்தும்பட்சத்தில், இந்தியா - ஆஃப்கானிஸ்தான் - நியூசிலாந்து ஆகிய 3 அணிகளுமே தலா 6 புள்ளிகளை பெறும். அதனால் நெட் ரன்ரேட்டின் அடிப்படையில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறும்.

எனவே இந்தியாவின் குடுமி ஆஃப்கானிஸ்தான் கையில் உள்ளது. ஆஃப்கானிஸ்தான் நியூசிலாந்தை வீழ்த்தினால், இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறும்.

இந்திய அணிக்கு அரையிறுதிக்கான வாய்ப்பு இன்னும் இருக்கும் நிலையில், இந்திய அணி குறித்து ஆணவமாக பேசியுள்ளார் ஷோயப் அக்தர்.

இந்த டி20 உலக கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. க்ரூப் 2-ல் முதல் போட்டியாக நடந்த இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. உலக கோப்பைகளில் பாகிஸ்தானிடம் தோற்றதேயில்லை என்ற இந்திய அணியின் சாதனைப்பயணம் அந்த தோல்வியுடன் முடிவடைந்தது.

பேட்டிங், பவுலிங் என அனைத்துவகையிலும் இந்திய அணியின் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடிய பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த தோல்வியிலிருந்து இந்திய அணி மீண்டு வரவே ஒரு வாரத்திற்கு மேல் எடுத்துக்கொண்டது. அதன்பின்னர் நியூசிலாந்துக்கு எதிராகவும் தோல்வியடைந்த இந்திய அணி, அந்த தோல்விக்கு பின்னர் வெகுண்டெழுந்து, அடுத்த 2 போட்டிகளில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு எதிராக அபார வெற்றிகளை பெற்று அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துள்ளது.

முதல் போட்டியில் இந்திய அணியை தோற்கடித்ததை மனதில் வைத்துக்கொண்டு ஆணவமாக பேசியுள்ளார் அக்தர். தனது யூடியூப் சேனலில் பேசிய ஷோயப் அக்தர், இந்தியாவும் பாகிஸ்தானும் ஃபைனலில் மோத வேண்டும். அப்படி மோதினால் தான், இந்திய அணியை மீண்டும் பாகிஸ்தான் வீழ்த்த முடியும். அது கிரிக்கெட்டுக்கு நல்லது என்று அக்தர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவும் பாகிஸ்தானும் ஃபைனலில் மோதினால் வியாபாரம் பெரிதாக இருக்கும்; போட்டி பார்க்கவும் நன்றாக இருக்கும் என்பதால் பல முன்னாள் வீரர்கள், ஃபைனலில்  இந்தியா - பாகிஸ்தான் மோத வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். ஆனால் அக்தரின் பேச்சில் அதீத நம்பிக்கையும் ஆணவமும் தெரிகிறது. ஒருவேளை ஃபைனலில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதினால், பாகிஸ்தானிடம் அடி வாங்கிய அதே தொடரில் பழிதீர்க்கும் வாய்ப்பு இந்தியாவிற்கு கிடைக்கும். ஃபைனலில் பாகிஸ்தானை பங்கம் செய்து இந்திய அணி அபார வெற்றி பெற்றுவிடும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் ஆரம்பத்திலேயே தோல்விகளை அடைந்துவிட்டதால் சுதாரித்துவிட்டது இந்திய அணி.
 

click me!