ஷிகர் தவானின் கெரியர் ஓவர்.. ஒருநாள் அணியில் தொடக்க வீரருக்கான கதவு திறந்தது

By karthikeyan VFirst Published Nov 18, 2019, 5:27 PM IST
Highlights

டெஸ்ட் அணியிலிருந்து ஏற்கனவே ஓரங்கட்டப்பட்டுவிட்ட தவான், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் படுமோசமாக சொதப்பிவருவதால் விரைவில் ஓரங்கட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சதமடித்த தவான், அந்த போட்டியில் காயமடைந்ததால் உலக கோப்பை தொடரிலிருந்து விலகினார். அதன்பின்னர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான போட்டிகளில் சரியாக ஆடாத தவான், தொடர்ந்து சொதப்பிவருகிறார். 

வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டிகளில் மந்தமாக ஆடி படுமோசமாக சொதப்பிய தவான், வங்கதேசத்துக்கு எதிராகவும் மோசமாக ஆடினார். வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 42 பந்துகளில் 41 ரன்கள் அடித்து பயனற்ற இன்னிங்ஸை ஆடிவிட்டுச்சென்றார். அணியில் தனது இடத்தை தக்கவைக்க, அடுத்த இரண்டு போட்டிகளிலும் நன்றாக ஆடியாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த தவான், அவற்றிலும் சொதப்பினார். 

அதன்பின்னர் தற்போது சையத் முஷ்டாக் அலி தொடரில் டெல்லி அணியில் ஆடிவரும் தவான், அதில் கூட சரியாக ஆடவில்லை. சையத் முஷ்டாக் அலி தொடரில், உள்நாட்டு பவுலர்களை எதிர்கொள்ளும்போதே, பந்துக்கு சமமான ரன் மட்டுமே அடிக்கிறார். அதுவும் பெரிய ஸ்கோர் அல்ல. இவ்வாறு தவான் சொதப்பி கொண்டிருக்கும் நிலையில், டெஸ்ட் போட்டியையே ஒருநாள் போட்டி போல அதிரடியாக ஆடி, தவானின் இடத்தை கிட்டத்தட்ட பிடித்துவிட்டார் மயன்க் அகர்வால்.

உள்நாட்டு போட்டிகளில் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடியதன் விளைவாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான மயன்க் அகர்வால், ஒரே ஆண்டில் இரண்டு இரட்டை சதங்களை அடித்து அசத்தியுள்ளார். டெஸ்ட் போட்டி என்பதற்காக மிகவும் மந்தமாக ஆடாமல் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசுகிறார். அவரது ஸ்டிரைக் ரேட் நன்றாகவுள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 8 சிக்ஸர்களை விளாசினார். 

லிஸ்ட் ஏ போட்டிகளிலும் நன்றாக் ஆடியிருப்பதால், அவர் ஒருநாள் அணியின் தொடக்க வீரராக விரைவில் வாய்ப்பு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மயன்க் அகர்வால் அனைத்து விதமான ஷாட்டுகளையும் ஆடுகிறார். புல் ஷாட், கவர் டிரைவ், ஃபிளிக் ஷாட், ஸ்டிரைட் டிரைவ், அப்பர் கட், ஸ்வீப் ஷாட் என அனைத்து விதமான ஷாட்டுகளையும் ஆடுவதுடன், தனது பலவீனம் எது என்பதை வெளிக்காட்டாமல் சாமர்த்தியாகவும் நேர்த்தியாகவும் ஆடுகிறார். 

தவான் தொடர்ந்து சொதப்பிவருவதால் விரைவில் மயன்க் அகர்வால் ஒருநாள் அணியில் தொடக்க வீரராக இறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல டி20 போட்டிகளில் ரோஹித்துடன் ராகுல் தொடக்க வீரராக இறக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தவானின் கெரியர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது என்பது அப்பட்டமாக தெரிகிறது. 
 

click me!