தாதாவின் சாதனையை தகர்த்த தவான்..! சர்வதேச அளவில் 4ம் இடத்தை பிடித்த தவான்

By karthikeyan VFirst Published Jul 19, 2021, 3:45 PM IST
Highlights

சர்வதேச கிரிக்கெட்டில் விரைவில் 6000 ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இந்திய அளவில் 2ம் இடத்தையும், சர்வதேச அளவில் 4ம் இடத்தையும் பிடித்துள்ளார் ஷிகர் தவான்.
 

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 262 ரன்கள் அடிக்க, ஷிகர் தவானின் பொறுப்பான பேட்டிங்(86), பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவின் அதிரடி பேட்டிங், இஷான் கிஷனின் அரைசதம் ஆகியவற்றால் 37வது ஓவரிலேயே இலக்கை எட்டி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் ஒருமுனையில் பிரித்வி ஷா, இஷான் கிஷன் ஆகிய இளம் வீரர்கள் அடித்து ஆடினாலும், மறுமுனையில் நிலைத்து நின்று நிதானமாகவும் பொறுப்புடனும் ஆடிய தவான் 86 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார்.

இந்த போட்டியில் 86 ரன்கள் அடித்ததன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் 6063 ரன்களை அடித்துள்ளார். தவான் அவரது 140வது ஒருநாள் இன்னிங்ஸில் 6000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். இதன்மூலம், அதிவேகமாக ஒருநாள் கிரிக்கெட்டில் 6000 ரன்கள் அடித்த 2வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

136 ஒருநாள் இன்னிங்ஸ்களில் 6000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய விராட் கோலி முதலிடத்தில் உள்ள நிலையில், 140 இன்னிங்ஸ்களில் 6000 ரன்கள் அடித்த தவான் 2ம் இடத்தை பிடித்துள்ளார். இதற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தான் 2ம் இடத்தில் இருந்தார். 149 இன்னிங்ஸ்களில் கங்குலி 6000 ரன்களை எட்டினார்.

சர்வதேச அளவில் ஒருநாள் கிரிக்கெட்டில் 6000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய வீரர்களில் ஹாஷிம் ஆம்லா(123 இன்னிங்ஸ்), விராட் கோலி(136 இன்னிங்ஸ்), கேன் வில்லியம்சன்(139 இன்னிங்ஸ்) ஆகிய மூவருக்கு அடுத்து 4ம் இடத்தை பிடித்துள்ளார் ஷிகர் தவான்.
 

click me!