அந்த இந்திய வீரருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை.. தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன் வேதனை

By karthikeyan VFirst Published Apr 20, 2020, 5:08 PM IST
Highlights

இந்திய அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் ஜவகல் ஸ்ரீநாத்துக்கு கிடைத்திருக்க வேண்டிய அங்கீகாரம் சரியாக கிடைக்கவில்லை என்று ஷான் போலாக் கருத்து தெரிவித்துள்ளார்.
 

தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும் சிறந்த ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர்களில் ஒருவருமான ஷான் போலாக், தென்னாப்பிரிக்க அணிக்காக 108 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 400 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் 3700 ரன்களையும் குவித்தவர். 

கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், ஷான் போலாக், வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் மைக்கேல் ஹோல்டிங் மற்றும் இங்கிலாந்து ஃபாஸ்ட் பவுலர் ஸ்டூவர்ட் பிராடுடன் ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் உரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். 

அப்போது பேசிய ஷான் போலாக், இந்திய ஃபாஸ்ட் பவுலர் ஜவகல் ஸ்ரீநாத்துக்கு, அவருக்கு கிடைத்திருக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று தெரிவித்தார்.

கர்நாடகாவை சேர்ந்த ஃபாஸ்ட் பவுலர் ஜவகல் ஸ்ரீநாத், 1991ம் ஆண்டிலிருந்து 2003ம் ஆண்டுவரை இந்திய அணியில் ஆடினார். 2003 உலக கோப்பை இறுதி போட்டி வரை ஆடிய ஸ்ரீநாத், அந்த போட்டியுடன் ஓய்வு பெற்றார். 2003 உலக கோப்பையில் மிகச்சிறந்த பங்காற்றியவர் ஸ்ரீநாத். இந்திய அணி அந்த உலக கோப்பையில் இறுதி போட்டிவரை முன்னேற ஸ்ரீநாத்தின் பங்களிப்பு முக்கியமானது. 

இந்திய அணிக்காக 67 டெஸ்ட் போட்டிகளிலும் 229 ஒருநாள் போட்டிகளிலும் ஆடியும் முறையே, 236 மற்றும் 315 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!