இதுக்காகவே வெயிட் பண்ணமாதிரி வெறித்தனமா வெளுத்து கட்டிய ஷர்துல் தாகூர்! 200 கூட அடிக்காமல் சுருண்ட இந்திய அணி

By karthikeyan VFirst Published Sep 2, 2021, 9:49 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் உள்ள நிலையில், 4வது டெஸ்ட் இன்று லண்டன் ஓவலில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.

இந்த போட்டியில் இரு அணிகளும் தலா 2 மாற்றங்களுடன் களமிறங்கியது. இந்திய அணியில் இஷாந்த் சர்மா மற்றும் ஷமி ஆகிய ஃபாஸ்ட் பவுலர்களுக்கு பதிலாக உமேஷ் யாதவ் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகிய இருவரும் களமிறக்கப்பட்டனர். இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர் மற்றும் சாம் கரன் ஆகிய இருவருக்கு பதிலாக ஆலி போப் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 11 ரன்னில் கிறிஸ் வோகின் பந்தில் ஆட்டமிழந்து நடையை கட்டினார். இந்த ஆண்டில் தனது முதல் டெஸ்ட் போட்டியை ஆடும் வோக்ஸ், தனது முதல் ஓவரிலேயே ரோஹித்தின் விக்கெட்டை வீழ்த்தினார்.

ரோஹித் ஆட்டமிழந்த பிறகு ராகுல் மற்றும் புஜாரா ஆகிய இருவருமே ஒரு ரன் அடிக்கவே திணறிய நிலையில், ரோஹித் ஆட்டமிழந்த பிறகு ஒரு ரன் கூட அடிக்காமல், 17 ரன்னில் ராபின்சன் பந்தில் ஆட்டமிழந்தார் ராகுல்.

அதன்பின்னர் புஜாரா 4 ரன்னில் ஆட்டமிழக்க, 5ம் வரிசையில் ரஹானே இறக்கப்படாமல் ஜடேஜா இறக்கப்பட்டார். ஆனால் அந்த முயற்சிக்கு பலனில்லை. ஜடேஜா 10 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய கேப்டன் கோலி அரைசதம் அடித்த நிலையில், அதன்பின்னர் பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் சரியாக 50 ரன்னில் ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் ரஹானே 14 ரன்னிலும், ரிஷப் பண்ட் 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பின்வரிசையில் இறங்கிய ஷர்துல் தாகூர் அதிரடியாக பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து ஆடினார். ஆண்டர்சன், ராபின்சன் ஆகிய இந்திய பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் பவுலர்களின் பவுலிங்கை பொளந்துகட்டினார். இந்த தொடரில் இந்த போட்டியில் தான் முதல்முறையாக ஆட வாய்ப்பு பெற்ற ஷர்துல் தாகூர், தனக்கான வாய்ப்புக்காகவே காத்திருந்ததை போல, கிடைத்த வாய்ப்பை வீணடித்துவிடக்கூடாதென்ற நோக்கத்தில் அடித்து ஆடினார்.

31 பந்தில் அரைசதம் அடித்த ஷர்துல் தாகூர், 36 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 57 ரன் அடித்து ஆட்டமிழக்க, மற்ற டெயிலெண்டர்கள் மளமளவென ஆட்டமிழக்க, 191 ரன்களுக்கே முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது இந்திய அணி.
 

click me!