#INDvsENG ரோஹித் கொடுத்த ஐடியாவால் தான் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினேன்..! ஷர்துல் தாகூர் ஓபன் டாக்

By karthikeyan VFirst Published Mar 19, 2021, 5:23 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டி20 போட்டியில் ரோஹித் சர்மாவின் அறிவுரையால் தான் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்த முடிந்ததாக ஷர்துல் தாகூர் கூறியுள்ளார்.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 4வது டி20 போட்டி அகமதாபாத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 185 ரன்களை குவித்தது.

ரோஹித்(12), ராகுல்(14), கோலி(1) ஆகிய வீரர்கள் ஏமாற்றமளிக்க, சர்வதேச கிரிக்கெட்டில் முதல் இன்னிங்ஸை ஆடிய சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி 28 பந்தில் அரைசதம் அடித்தார். 31 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 57 ரன்களை விளாசிய நிலையில், 14வது ஓவரின் 2வது பந்தில் சர்ச்சைக்குரிய வகையில் ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் அதிரடியாக ஆடி 18 பந்தில் 37 ரன்களை விளாசி இந்திய அணி 185 ரன்களை குவிக்க உதவினார் ஷ்ரேயாஸ் ஐயர். ரிஷப் பண்ட் தன் பங்கிற்கு 23 பந்தில் 30 ரன்கள் அடித்தார். இதையடுத்து 20 ஓவரில் 185 ரன்கள் அடித்தது இந்திய அணி.

186 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி 8.5 ஓவரில் 66 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஜோஸ் பட்லர்(9), டேவிட் மாலன்(14), ஜேசன் ராய் (27 பந்தில் 40 ரன்) ஆகியோர் ஆட்டமிழக்க, அதன்பின்னர் பென் ஸ்டோக்ஸும் பேர்ஸ்டோவும் இணைந்து அதிரடியாக ஆடி வேகமாக ஸ்கோரை உயர்த்தினர். இருவருமே அதிரடியாக ஆடியதால் வெற்றியை நோக்கி நகர்ந்தது இங்கிலாந்து அணி. இருவரும் இணைந்து 6 ஓவரில் 65 ரன்களை குவித்தனர். ஸ்டோக்ஸும் பேர்ஸ்டோவும் களத்தில் இருந்தவரை வெற்றி இங்கிலாந்து வசமிருந்தது.

ஆனால் ஆட்டத்தின் முக்கியமான சூழலில் ஜானி பேர்ஸ்டோவை 25 ரன்னில் வீழ்த்தி பிரேக் கொடுத்தார் ராகுல் சாஹர். 16 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் அடித்திருந்தது. கடைசி 4 ஓவரில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 46 ரன்கள் தேவைப்பட்டது. அப்படியான இக்கட்டான சூழலில் களத்திலிருந்து வெளியேறினார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி.

இதையடுத்து அதன்பின்னர் ரோஹித் சர்மா கேப்டன்சி செய்தார். ரோஹித் சர்மா கேப்டன்சி செய்ய தொடங்கிய அடுத்த ஓவரின் முதல் 2 பந்துகளில் ஸ்டோக்ஸ்(46) மற்றும் மோர்கன் ஆகிய இருவரையும் அடுத்தடுத்து வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார் ஷர்துல் தாகூர். ஷர்துல் தாகூர் வீசிய 17வது ஓவர் தான் வெற்றிக்கு வழிவகுத்து கொடுத்தது. கடைசி 4 ஓவரில் 37 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 8 ரன் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.

இந்நிலையில், போட்டிக்கு பின்னர் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்த சம்பவம் குறித்து பேசிய ஷர்துல் தாகூர், ரோஹித் எனது உள்ளுணர்வின் படி செயல்படுமாறு அறிவுறுத்தினார். நன்றாக நேரம் எடுத்து சிந்தித்து செயல்பட சொன்னார். மைதானத்தின் ஒரு பகுதி பெரிதாக இருப்பதால், அதற்கேற்றவாறு திட்டமிட்டு பந்துவீச சொன்னார். அதன்படி செயல்பட்டதாக ஷர்துல் தாகூர் தெரிவித்தார்.
 

click me!