கோலி இப்படி பண்ணுவார்னு நாங்க நெனச்சு கூட பார்க்கல.. செம ஷாக்கிங்கா இருந்துச்சு - ஷர்துல் தாகூர்

Published : Feb 03, 2022, 06:07 PM IST
கோலி இப்படி பண்ணுவார்னு நாங்க நெனச்சு கூட பார்க்கல.. செம ஷாக்கிங்கா இருந்துச்சு - ஷர்துல் தாகூர்

சுருக்கம்

விராட் கோலி டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து திடீரென விலகியது குறித்து ஷர்துல் தாகூர் கருத்து கூறியுள்ளார்.  

2014ம் ஆண்டிலிருந்து இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்துவந்த விராட் கோலி, கடைசியாக நடந்த தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடருடன் டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்து விலகினார்.

விராட் கோலியின் கேப்டன்சியில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் பல அபாரமான சாதனைகளை படைத்துள்ளது. ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக இந்திய அணி கோலியின் தலைமையில் டெஸ்ட் தொடரை வென்றது. இங்கிலாந்து, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் என உலக முழுதும் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகளை குவித்து ஆதிக்கம் செலுத்தியது இந்திய அணி.

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வரை சென்ற இந்திய அணி ஃபைனலில் நியூசிலாந்திடம் தோற்று கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி தலைமையில் இந்திய அணி வெற்றிநடை போட்டது.  

விராட் கோலி இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனியை ஏற்றபோது ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 7ம் இடத்தில் இருந்தது இந்திய அணி. அதன்பின்னர் இந்திய அணியை கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றி, டெஸ்ட்டில் நம்பர் 1 இடத்திற்கு கொண்டுவந்த விராட் கோலி, அவரது கேப்டன்சியில் நீண்டகாலம் நம்பர் 1 இடத்தை தக்கவைத்தார்.

விராட் கோலியின் கேப்டன்சியில் 68 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய இந்திய அணி 40 வெற்றிகளை பெற்றுள்ளது. இந்தியாவில் ஆடிய 31 டெஸ்ட் போட்டிகளில் கோலியின் கேப்டன்சியில் இரண்டே இரண்டு தோல்விகள் மட்டுமே. கோலியின் கேப்டன்சியில் வெளிநாடுகளில் ஆடிய 36 டெஸ்ட் போட்டிகளில் 16 வெற்றிகளை பெற்றது இந்திய அணி. வெளிநாட்டில் வெற்றி சதவிகிதம் 44.44 ஆகும். இதுவே வெளிநாட்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆசிய கேப்டனின் அதிகபட்ச வெற்றி விகிதம். டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் வெற்றி விகிதம் 58.82 ஆகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வெற்றி விகிதம் கொண்ட கேப்டன்கள் பட்டியலில் 4ம் இடத்தை பிடித்துள்ளார். ஸ்டீவ் வாக், டான் பிராட்மேன், ரிக்கி பாண்டிங் ஆகிய மூவருக்கு அடுத்த 4ம் இடத்தில் உள்ளார் விராட் கோலி.  

விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி மிகச்சிறப்பாக ஆடி வெற்றிகளை குவித்துவந்த நிலையில், குறிப்பாக வெளிநாடுகளில் வெற்றிகளை குவித்துவந்த நிலையில், விராட் கோலி திடீரென டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து அவர் விலகியது அனைவருக்குமே அதிர்ச்சியளித்தது.

இந்நிலையில், விராட் கோலி கேப்டன்சியிலிருந்து விலகியது குறித்து பேசியுள்ள இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாகூர், விராட் கோலி கேப்டன்சியிலிருந்து விலகியது உணர்ச்சிமிகு தருணம். அவரது கேப்டன்சியில் இந்திய அணி வெளிநாடுகளில் மிகச்சிறப்பாக ஆடி வெற்றிகளை குவித்துவந்தது. தோற்ற போட்டிகளிலும் கூட, மிகவும் நெருக்கமாக சென்றே தோற்றோம். கோலியின் கேப்டன்சியில் இந்திய அணி நன்றாக ஆடிக்கொண்டிருந்த நிலையில், அவர் கேப்டன்சியிலிருந்து விலகுவார் என்று யாருமே நினைத்துக்கூட பார்க்கவில்லை. அது அதிர்ச்சிகரமான முடிவாக இருந்தாலும், அவரது முடிவை மதிக்கிறோம் என்றார் ஷர்துல் தாகூர்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!