IPL 2022: அவர் இனிமேல் ஆடுவது கஷ்டம்..! டெல்லி கேபிடள்ஸ் கோச் ஷேன் வாட்சன் கொடுத்த அதிர்ச்சி தகவல்

By karthikeyan VFirst Published May 13, 2022, 3:32 PM IST
Highlights

டெல்லி கேபிடள்ஸ் அணியின் இளம் அதிரடி தொடக்க வீரர் பிரித்வி ஷா காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டுவருவதால், லீக் சுற்றின் எஞ்சிய 2 போட்டிகளில் ஆடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ஐபிஎல் 15வது சீசன் லீக் சுற்றின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றில் இன்னும் சில போட்டிகளே எஞ்சியுள்ளன. குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் அணியாக பிளே ஆஃபிற்கு முன்னேறிவிட்ட நிலையில், லக்னோ அணியும் பிளே ஆஃபிற்கு முன்னேறிவிடும். மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் தொடரை விட்டு வெளியேறிவிட்டன.

எனவே எஞ்சிய 2 இடங்களுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிடள்ஸ், ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இனிவரும் ஒவ்வொரு போட்டியுமே இந்த அணிகளுக்கு மிக முக்கியமானவை. 

இதுவரை ஆடிய 12 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் 5ம் இடத்தில் இருக்கும் டெல்லி கேபிடள்ஸ் பிளே ஆஃபிற்கு முன்னேற பிரகாசமான வாய்ப்புள்ளது. ஆனால் டெல்லி அணியின் பிரித்வி ஷா ஆடமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

டெல்லி கேபிடள்ஸ் அணியின் அதிரடி தொடக்க வீரரான பிரித்வி ஷா கடந்த சில சீசன்களாகவே டெல்லி அணிக்கு டாப் ஆர்டரில் அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்து, முக்கிய பங்காற்றிவருகிறார். இந்த சீசனிலும் அபாரமாக பேட்டிங் ஆடி ஸ்கோர் செய்த பிரித்வி ஷா, 9 போட்டிகளில் ஆடி 259 ரன்கள் அடித்துள்ளார்.

2 வாரங்களுக்கும் மேலாக அவருக்கு காய்ச்சல் அடிப்பதால், கடந்த 3 போட்டிகளில் அவர் ஆடவில்லை. கடைசி 2  லீக் போட்டிகளிலும் அவர் ஆடமாட்டார் என்றுடெல்லி கேபிடள்ஸ் அணியின் உதவி பயிற்சியாளர் ஷேன் வாட்சன் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய ஷேன் வாட்சன், பிரித்வி ஷாவிற்கு என்ன நோய் என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் அவருக்கு கடந்த 2 வாரங்களாக காய்ச்சல் இருந்துவருகிறது. அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். பிரித்வி ஷா திறமையான இளம் வீரர். உலகின் சிறந்த பவுலர்களை எல்லாம் அடித்து துவம்சம் செய்திருக்கிறார் பிரித்வி. அவர் விரைவில் குணம்பெற்று முழு ஃபிட்னெஸுடன் திரும்புவார் என நம்புகிறேன்.  உடல்நலக்குறைவு காரணமாக அவர் கடைசி 2 போட்டிகளில் ஆடமாட்டார் என்று ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.

கடைசி 2 முக்கியமான போட்டிகளில் பிரித்வி ஷா ஆடமுடியாமல் போனது, டெல்லி அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும்.
 

click me!