கேப்டனும் சரியில்ல; நீங்களும் சரியில்ல.. என்னமோ பண்ணிட்டு போங்கடா..! ஆஸி., அணியை கடுமையா விளாசிய ஷேன் வார்ன்

By karthikeyan VFirst Published Jan 18, 2021, 7:05 PM IST
Highlights

ஆஸி., அணி இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை எளிதாக வெல்ல கிடைத்த வாய்ப்புகளை தவறவிட்டுவிட்டதாக ஆஸி., அணியின் முன்னாள் சுழல் ஜாம்பவான் ஷேன் வார்ன் விளாசியுள்ளார்.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 3 போட்டிகள் முடிந்து, கடைசி டெஸ்ட் நாளையுடன்(ஜனவரி 19) முடிவடையவுள்ள நிலையில், தொடர் 1-1 என சமநிலையில் உள்ளதால், பிரிஸ்பேனில் நாளை முடியவுள்ள கடைசி டெஸ்ட் முடிந்தால் தான் எந்த அணி தொடரை வெல்லும் என்பது முடிவாகும்.

இந்த தொடரில் விராட் கோலி முதல் போட்டியில் மட்டும் ஆடிவிட்டு குழந்தை பிறக்கவிருந்ததால் கடைசி 3 டெஸ்ட்டில் ஆடாமல் நாடு திரும்பினார். சீனியர் ஃபாஸ்ட் பவுலர் இஷாந்த் சர்மா காயம் காரணமாக இந்த தொடரில் ஆடாத நிலையில், ஷமி, உமேஷ் யாதவ், பும்ரா, ஜடேஜா, அஷ்வின், கேஎல் ராகுல், ஹனுமா விஹாரி என முக்கியமான வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்த போட்டிகளில் காயம் காரணமாக விலகியதால், வாஷிங்டன் சுந்தர், நடராஜன், முகமது சிராஜ், நவ்தீப் சைனி ஆகிய வீரர்கள் இந்த தொடரில் அறிமுக வீரர்களாக இறங்கினர். 

பிரிஸ்பேனில் நடந்துவரும் கடைசி டெஸ்ட்டில் ஆடும் பவுலர்கள் சுந்தர், நடராஜன், சிராஜ், சைனி, தாகூர் ஆகிய அனைவருமே அனுபவமில்லாத பவுலர்கள். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் மயன்க் அகர்வாலை மிடில் ஆர்டரில் இறக்கிவிடும் அளவிற்கு இந்திய அணியில் ஏகப்பட்ட வீரர்களுக்கு காயம்.

ஆனாலும் இந்த சவால்களை எல்லாம் எதிர்கொண்டு இந்திய அணி சிறப்பாகவே ஆடிவருகிறது. சிட்னியில் நடந்த 3வது டெஸ்ட்டில் அஷ்வின் மற்றும் விஹாரி ஆகிய இருவரின் சிறப்பான பேட்டிங்கால் இந்திய அணி போட்டியை டிரா செய்தது.

பிரிஸ்பேனில் நடந்துவரும் கடைசி டெஸ்ட்டிலும் 186 ரன்களுக்கே ஆறு விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், 7வது விக்கெட்டுக்கு சுந்தரும் தாகூரும் சேர்ந்து 123 ரன்களை சேர்த்து கொடுத்தனர். இருவருமே அரைசதம் அடித்தனர். அனுபவமற்ற, அதுவும் பவுலர்களான அவர்களது பொறுப்பான பேட்டிங்கால் தான் இந்திய அணி 336 ரன்களை முதல் இன்னிங்ஸில் குவித்தது. அதனால் தான் முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி வெறும் 33 ரன்கள் பின் தங்கியது. இல்லையெனில் வித்தியாசம் பெரியளவில் இருந்திருக்கும்.

முக்கியமான பேட்ஸ்மேன்களை எல்லாம் விரைவில் வீழ்த்திய ஆஸி., பவுலர்களால் சுந்தரையும் தாகூரையும் எளிதாக வீழ்த்தமுடியவில்லை. ஆஸி., அணியின் வியூகங்கள் சரியில்லை என்று ஷேன் வார்ன் விமர்சித்துள்ளார். கேப்டன் டிம் பெய்னையும் கடுமையாக விளாசியுள்ளார்.

இந்த தொடர் ஆஸி., டெஸ்ட் கேப்டன் டிம் பெய்னுக்கு மறக்கப்பட வேண்டிய ஒரு தொடர். விக்கெட் கீப்பிங், கேப்டன்சி மற்றும் பேட்டிங் என அனைத்துவகையிலுமே டிம் பெய்ன் சொதப்பினார். வெற்றி பெற வேண்டிய சிட்னி டெஸ்ட்டை கோட்டைவிட்டோம் என்று உணர்ந்த டிம் பெய்ன், அந்த விரக்தியை அஷ்வினிடம் வெளிப்படுத்திய விதம், வெறுப்பை வெளிக்காட்டிய விதம் கடும் விமர்சனத்துக்குள்ளானது.

சரியான வியூகங்களை வகுக்க தெரியாத மற்றும் வெற்றி பெற வாய்ப்பிருந்த போட்டிகளில் வெற்றியை பறிக்க சாமர்த்தியமில்லாத கேப்டனாக டிம் பெய்ன் திகழ்கிறார். இந்நிலையில், டிம் பெய்னை விளாசிய ஷேன் வார்ன், இந்த தொடரில் இந்திய அணி சிறப்பாக ஆடியிருக்கிறது. ஆஸி., அணிக்கு இந்த தொடரை வெல்ல பல வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் அவற்றையெல்லாம் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை.

வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உருவான தருணங்களில் எல்லாம் ஆஸி., அணியின் வியூகங்கள் சரியில்லை. ஒரு கேப்டனாக அந்த சமயங்களில் எல்லாம் டிம் பெய்ன் தான் சாமர்த்தியமாகவும் சமயோசிதமாகவும் சிந்தித்து செயல்பட்டிருக்க வேண்டும். அதையெல்லாம் அவர் ஏன் செய்யவில்லை? இந்த தொடரில் அவர் விக்கெட் கீப்பிங்கிலும் சரியாக செயல்படவில்லை.

அதேவேளையில், டிம் பெய்னை மட்டுமே இந்த விஷயத்தில் குறைகூற முடியாது. பவுலர்களும் சரியாக செயல்படவில்லை. பவுலர்களால், அவர்களது திட்டங்களை செயல்படுத்தவும், தங்களுக்கு தேவையான ஃபீல்டிங் செட்டப் செய்துகொள்ள முடியும். ஆனால் அவர்களும் அதை சரியாக செய்யவில்லை என்று ஷேன் வார்ன் விமர்சித்துள்ளார்.
 

click me!