அந்த விஷயம் ரோஹித்தோட ரத்தத்துல ஊறுனது.. சேவாக் புகழாரம்

By karthikeyan VFirst Published Jul 7, 2019, 5:40 PM IST
Highlights

ரோஹித் சர்மா இந்த உலக கோப்பையில் இன்னும் 13 ரன்கள் அடித்தால் ஹைடனின் சாதனையையும் 27 ரன்கள் அடித்தால் சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் ரோஹித் சர்மா முறியடித்துவிடுவார். 
 

நடப்பு உலக கோப்பை தொடர் இந்திய அணிக்கு மிகச்சிறப்பானதாக அமைந்துள்ளது. லீக் சுற்றில் இங்கிலாந்துக்கு எதிரான ஒரேயொரு போட்டியில் மட்டுமே தோற்று 7 வெற்றிகளுடன் 15 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. 

இந்திய அணியின் மிகப்பெரிய பலமே டாப் ஆர்டர் பேட்டிங்கும், பவுலிங்கும் தான். அவை இரண்டிலுமே இந்திய அணி தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த உலக கோப்பையில் ரோஹித் சர்மா அபாரமாக ஆடி சதங்களை குவித்துவருகிறார். 

இந்த உலக கோப்பையில் இதுவரை 8 இன்னிங்ஸ்களில் ஆடி 5 சதங்களை அடித்த ரோஹித் சர்மா, ஒரு உலக கோப்பையில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சங்கக்கராவின்(4 சதங்கள்) சாதனையை முறியடித்தார். 

லீக் சுற்று முடிந்துள்ள நிலையில், ரோஹித் சர்மா 8 இன்னிங்ஸ்களில் 647 ரன்களை குவித்துள்ளார். ஒரு உலக கோப்பை தொடரில் அதிக ரன்களை குவித்த வீரர்களின் பட்டியலில் 2003ல் 673 ரன்களை குவித்த சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். 2007 உலக கோப்பையில் 659 ரன்களை குவித்த ஹைடன் இரண்டாமிடத்தில் உள்ளார். ரோஹித் சர்மா 647 ரன்களுடன் மூன்றாமிடத்தில் உள்ளார். 

இன்னும் 13 ரன்கள் அடித்தால் ஹைடனின் சாதனையையும் 27 ரன்கள் அடித்தால் சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் ரோஹித் சர்மா முறியடித்துவிடுவார். 

இப்படியாக இந்த உலக கோப்பையில் அபாரமாக ஆடி சதங்களை விளாசி ரன்களை குவித்து அணியின் வெற்றிகளுக்கு முக்கியமான காரணமாக ரோஹித் சர்மா திகழ்கிறார்.

இலங்கைக்கு எதிராக சாதனை சதமடித்த ரோஹித் சர்மாவை சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட ஜாம்பவான்கள் வெகுவாக பாராட்டினர். இந்திய அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் வீரேந்திர சேவாக் தனக்கே உரிய பாணியில் ரோஹித்தை பாராட்டி டுவீட் செய்துள்ளார். 

ரோஹித் சர்மா நிலையான ஆட்டம் அபாரமானது. உலக கோப்பையில் சதமடிப்பது என்பது ரோஹித்துக்கு அவரது ரத்தத்தில் ஊறிய விஷயமாக உள்ளது என்று பாராட்டியுள்ளார். 
 

click me!