நீங்க இன்னும் வளரணும் தம்பி.. இளம் வீரருக்கு சேவாக்கின் அறிவுரை

By karthikeyan VFirst Published Aug 27, 2019, 1:15 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் நான்காவது வரிசையில் இறங்கிய ரிஷப் பண்ட், இரண்டிலுமே சொதப்பினார். ஒரு போட்டியில் 20 ரன்கள் அடித்த அவர், அடுத்த போட்டியில் டக் அவுட்டானார். 

இந்திய அணி நிர்வாகம் ரிஷப் பண்ட் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை அவர் தொடர்ந்து சிதைத்து கொண்டிருக்கிறார். இந்திய அணியில் 15 ஆண்டுகளாக கோலோச்சிய ஜாம்பவான் தோனியின் இடத்தை பூர்த்தி செய்ய வேண்டிய நெருக்கடியில் உள்ளார் ரிஷப் பண்ட். 

ரிஷப் பண்ட் தான் இந்திய அணியின் எதிர்காலம் என இந்திய அணி நிர்வாகம் அவர் மீது நெருக்கடி கொடுக்காமல் இருந்தாலும், ரிஷப் பண்ட்டுக்கு ஒரு நெருக்கடி இருந்துகொண்டே இருக்கிறது. இந்திய ஒருநாள் அணியின் சிக்கலாக இருக்கும் மிடில் ஆர்டருக்கு தீர்வு காணும் விதமாக ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் எடுக்கப்பட்டும் கூட, நான்காம் வரிசையில் ரிஷப் பண்ட் தான் இறக்கப்பட்டார்.

ஆனால் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் நான்காவது வரிசையில் இறங்கிய ரிஷப் பண்ட், இரண்டிலுமே சொதப்பினார். ஒரு போட்டியில் 20 ரன்கள் அடித்த அவர், அடுத்த போட்டியில் டக் அவுட்டானார். அதேபோல் டெஸ்ட் போட்டியிலும் சரியாக ஆடவில்லை. இரண்டு இன்னிங்ஸ்களிலும் சொதப்பினார். முதல் இன்னிங்ஸில் 24 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 7 ரன்களும் மட்டுமே அடித்தார். ரிஷப் பண்ட் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அப்போதுதான் அணி நிர்வாகம் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றிக்கொள்ள முடியும்.

இந்நிலையில், ரிஷப் பண்ட் குறித்து பேசியுள்ள முன்னாள் அதிரடி வீரர் சேவாக், ரிஷப் பண்ட் மிகச்சிறந்த திறமைசாலி. அபாரமான பேட்ஸ்மேன் அவர். ஆனால் அவர் இன்னும் மேம்பட வேண்டியது அவசியம். இந்திய அணியில் தொடர்ந்து இருந்துவருவதால், அணியுடன் இருக்கும் சூழலையும் கிடைக்கும் வாய்ப்புகளையும் பயன்படுத்தி, ரிஷப் பண்ட் தனது திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று சேவாக் அறிவுறுத்தியுள்ளார். 
 

click me!