தமிழ்நாட்டு அணிக்கு தினேஷ் கார்த்திக் கேப்டன்.. வெளியானது அதிரடி அறிவிப்பு

By karthikeyan VFirst Published Aug 27, 2019, 11:11 AM IST
Highlights

உள்நாட்டு ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே தொடருக்கான தமிழ்நாட்டு அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் அறிவிக்கப்பட்டுள்ளார். 

உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே தொடர் வரும் செப்டம்பர் 24ம் தேதி தொடங்கி அக்டோபர் 16ம் தேதி வரை நடக்கவுள்ளது. 

விஜய் ஹசாரே தொடருக்கான தமிழ்நாட்டு அணியின் கேப்டனாக சீனியர் வீரர் தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தேர்வுக்குழு, தினேஷ் கார்த்திக்கை கேப்டனாக நியமித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

தினேஷ் கார்த்திக் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து பேசிய தமிழ்நாட்டு அணியின் தேர்வுக்குழு தலைவர் செந்தில்நாதன், தினேஷ் கார்த்திக்கின் அனுபவம் மற்றும் கேப்டன்சி திறன் ஆகிய இரண்டையும் கருத்தில் கொண்டுதான் அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தினேஷ் கார்த்திக் வெவ்வேறு விதமான தொடர்களில் பல அணிகளை கேப்டனாக இருந்து வழிநடத்தியுள்ளார். ஐபிஎல்லில் கூட கேகேஆர் அணியின் கேப்டனாக இருந்துள்ளார். அவரது கேப்டன்சி திறனை கருத்தில் கொண்டுதான் கேப்டனாக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் வீரர்களை உத்வேகப்படுத்துவதில் தினேஷ் கார்த்திக் வல்லவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இந்திய அணியில் 2004ம் ஆண்டே அறிமுகமாகிவிட்ட தினேஷ் கார்த்திக், தோனி என்ற பெரும் புயலில் அடித்து செல்லப்பட்டவர். எனினும் அவ்வப்போது தினேஷ் கார்த்திக்கிற்கு அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுவந்தது. ஆனால் தொடர்ச்சியாக வாய்ப்பளிக்கப்படுவதில்லை. அவ்வப்போது கிடைக்கும் வாய்ப்புகளை அவரும் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. ஆனாலும் அவரது அனுபவம் வாய்ந்த விக்கெட் கீப்பிங்கை கருத்தில்கொண்டு அவருக்கு உலக கோப்பை அணியில் வாய்ப்பு கிடைத்தது. 

உலக கோப்பையில் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்தும் அதை அவர் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. அரையிறுதியில் இக்கட்டான நிலையில் அணி இருந்தபோது, சிறப்பாக ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டெடுக்க தவறிவிட்டார். தோனிக்கு முன்னதாக அரையிறுதியில் அவர் களமிறக்கப்பட்டும் அந்த வாய்ப்பை பயன்படுத்து கொள்ள தவறிவிட்டார். அதன்பின்னர் மீண்டும் இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டுவிட்டார். எனவே மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க அவர் விஜய் ஹசாரே தொடரை பயன்படுத்த முயல்வார். ஆனால் அவர் என்னதான் சிறப்பாக ஆடினாலும் மீண்டும் இந்திய ஒருநாள் அணியில் இடம் கிடைக்க வாய்ப்பேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!