டாம் லேதம், வாட்லிங் அபார சதம்.. பவுலிங்கும் அசத்தல்.. இலங்கையை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து

By karthikeyan VFirst Published Aug 27, 2019, 10:12 AM IST
Highlights

இலங்கை - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இலங்கை - நியூசிலாந்து இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி கடந்த 22ம் தேதி தொடங்கியது. 

இரண்டாவது போட்டியின் பெரும்பாலான ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. போட்டி தொடங்கியது முதல் 5 நாட்களுமே மழையால் ஆட்டம் தாமதமாகத்தான் தொடங்கியது. பெரும்பாலான ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட போதும், நியூசிலாந்து அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி, முதல் இன்னிங்ஸில் 244 ரன்கள் அடித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணியின் ராவல், வில்லியம்சன், ரோஸ் டெய்லர் ஹென்ரி நிகோல்ஸ் ஆகியோர் சோபிக்கவில்லை. ஆனால் ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் சிறப்பாக ஆடிய டாம் லேதம் சதமடித்து அசத்தினார். 

இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டுமானால் முதல் இன்னிங்ஸில் முடிந்தவரை அதிகமான ஸ்கோர் அடித்தாக வேண்டும் என்பதை உணர்ந்து நியூசிலாந்து அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஆடினர். டாம் லேதமிற்கு பின்னர், அவர் செய்த வேலையை வாட்லிங் சிறப்பாக செய்தார். வாட்லிங்கும் கோலின் டி கிராண்ட் ஹோமும் சிறப்பாக ஆடினர். வாட்லிங் சதமடிக்க, டி கிராண்ட் ஹோம் 83 ரன்களை குவித்தார். டாம் லேதம், வாட்லிங், டி கிராண்ட் ஹோம் ஆகியோரின் சிறப்பான பேட்டிங்கால் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி, 431 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. 

187ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணியின் பேட்ஸ்மேன்கள், நியூசிலாந்து அணியின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் டிக்வெல்லா மட்டும் நிலைத்து நின்று ஆடி அரைசதம் அடித்தார். ஆனாலும் விக்கெட்டுகள் மளமளவென சரிந்ததால் 122 ரன்களுக்கே ஆல் அவுட்டானது இலங்கை அணி. இதையடுத்து இன்னிங்ஸ் மற்றும் 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. 

இந்த வெற்றியின் மூலம் 60 புள்ளிகளை பெற்ற நியூசிலாந்து அணி, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இரண்டாமிடத்தை பிடித்தது. இலங்கை - நியூசிலாந்து இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமனானது. ஆட்டநாயகனாக டாம் லேதமும் தொடர் நாயகனாக வாட்லிங்கும் தேர்வு செய்யப்பட்டனர். 

click me!