
ரஞ்சி டிராபியில் மும்பை அணிக்காக ஆடிவரும் அதிரடி வீரர் சர்ஃபராஸ் கான். 2019-2020 ரஞ்சி தொடரிலிருந்து அபாரமாக ஆடிவருகிறார். அந்த சீசனில் 6 போட்டிகளில் 928 ரன்களை குவித்தார் சர்ஃபராஸ் கான். அதில் ஒரு முச்சதமும்(301) அடக்கம்.
2021ம் ஆண்டு ரஞ்சி தொடர் கொரோனா காரணமாக நடக்கவில்லை. இந்த ஆண்டு நடந்துவரும் ரஞ்சி தொடரிலும் அபாரமாக ஆடிவருகிறார். ஐபிஎல்லுக்கு முன் ரஞ்சி லீக் போட்டிகள் நடந்தன. சௌராஷ்டிராவுக்கு எதிரான போட்டியில் 275 ரன்களை குவித்த சர்ஃபராஸ் கான், கோவாவுக்கு எதிராக 63 மற்றும் 48 ரன்கள் அடித்தார். ஒடிசாவுக்கு எதிராக 165ரன்களை குவித்தார்.
ஐபிஎல் முடிந்தநிலையில், இப்போது காலிறுதி போட்டிகள் நடந்துவருகின்றன. மும்பையும் உத்தரகாண்ட் அணியும் ஆடிவரும் காலிறுதி போட்டியில் 153 ரன்களை குவித்தார் சர்ஃபராஸ் கான். இது முதல் தர கிரிக்கெட்டில் சர்ஃபராஸின் 7வது சதம்.
இந்த 7 சதங்கள் அடித்தபோதும், 150 ரன்களுக்கு மேல் குவித்தார் சர்ஃபராஸ் கான். கிரிக்கெட் வரலாற்றில் முதல் 7 முதல் தர சதங்களிலும் 150 ரன்களுக்கு மேல் குவித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார் சர்ஃபராஸ் கான்.
முதல் தர கிரிக்கெட்டில் அசத்திவரும் சர்ஃபராஸ் கானுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. ஐபிஎல்லிலும் அவருக்கு தொடர் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. நடந்து முடிந்த 15வது சீசனில் டெல்லி கேபிடள்ஸ் அணிக்காக ஆடிய சர்ஃபராஸ் கான், பிரித்வி ஷா ஆடாத ஒருசில போட்டிகளில் தொடக்க வீரராக இறங்கினார். ஆனால் பெரிதாக சோபிக்கவில்லை.