என்னை ஆடும் லெவனில் வாய்ப்பு கொடுக்குற வரை ஓயமாட்டேன்.. சஞ்சு சாம்சன் அபார பேட்டிங்

By karthikeyan VFirst Published Dec 27, 2019, 5:04 PM IST
Highlights

கேரளாவை சேர்ந்த சஞ்சு சாம்சன், கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக உள்நாட்டு போட்டிகளில் அபாரமாக ஆடிவருகிறார். 
 

விஜய் ஹசாரே, சையத் முஷ்டாக் அலி ஆகிய உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக ஆடினார். விஜய் ஹசாரேவில் அபாரமாக ஆடி இரட்டை சதமடித்து அசத்தினார். சஞ்சு சாம்சன் உள்நாட்டு போட்டிகளில் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடிவருவதால் இந்திய டி20 அணியில் இடம்பிடித்தார். 

வங்கதேசம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு எதிரான டி20 அணியில் இடம்பெற்றாலும், ஆடும் லெவனில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலுமே தொடர்ந்து சொதப்பியதால், அவரை நீக்கிவிட்டு விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக சஞ்சு சாம்சனை சேர்க்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்தன. 

ஆனாலும் ரிஷப் பண்ட் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு தொடர் வாய்ப்புகள் வழங்கப்பட்டுவருகின்றன. அதனால் சஞ்சு சாம்சனுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. 

இந்நிலையில், ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்காததை பற்றியெல்லாம் கவலைப்படாமல், ரஞ்சி தொடரில் கேரள அணிக்காக தனது ரன் வேட்டையை தொடர்ந்து நடத்திவருகிறார் சஞ்சு சாம்சன். குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் கேரள அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றுவிட்டது. 

ஆனால் சாம்சனின் பேட்டிங் இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக இருந்தது. முதல் இன்னிங்ஸில் வெறும் 5 ரன்களுக்கு அவுட்டான சஞ்சு சாம்சன், இரண்டாவது இன்னிங்ஸில் 82 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 78 ரன்களை குவித்தார். சஞ்சு சாம்சனின் பேட்டிங் இந்த இன்னிங்ஸில் சிறப்பாக இருந்தது. 

தன்னை இந்திய அணி நிர்வாகம் இனிமேல் ஆடும் லெவனில் புறக்கணிக்காத அளவிற்கு, தனது ஆட்டம் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் போல சாம்சன்... உள்நாட்டு போட்டிகளில் மீண்டும் தனது ரன் வேட்டையை தொடங்கிவிட்டார். இலங்கைக்கு எதிரான டி20 அணியில் சஞ்சு சாம்சன் இருக்கிறார். 3 போட்டிகள் கொண்ட அந்த டி20 தொடரிலாவது சஞ்சு சாம்சனுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கிறதா என்று பார்ப்போம்.
 

click me!