இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி..! சஞ்சய் மஞ்சரேக்கரின் தேர்வு

By karthikeyan VFirst Published May 19, 2021, 7:39 PM IST
Highlights

இலங்கைக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கான சஞ்சய் மஞ்சரேக்கர் தேர்வு செய்துள்ள இந்திய அணியின் ஆடும் லெவனை பார்ப்போம்.
 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஜூன் 18-22ல் இங்கிலாந்தில் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஆடிவிட்டு, அப்படியே இங்கிலாந்தில் இருந்து, இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் ஆடுகிறது.

இதற்கிடையே இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. அந்த காலக்கட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்தில் இருக்கும் என்பதால், இரண்டாம் தர இந்திய அணி இலங்கையை எதிர்கொள்கிறது. 

வெள்ளைப்பந்து ஸ்பெஷலிஸ்ட் வீரர்களான தவான், தீபக் சாஹர், சாஹல் ஆகியோருடன் சூர்யகுமார் யாதவ், பிரித்வி ஷா உள்ளிட்ட வீரர்களை கொண்ட அணி இலங்கையை எதிர்கொள்ளும். 

இந்நிலையில், இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியின் ஆடும் லெவனை சஞ்சய் மஞ்சரேக்கர் தேர்வு செய்துள்ளார். அதன்படி, ஷிகர் தவான், பிரித்வி ஷா ஆகிய இருவரையும் தொடக்க வீரர்களாக தேர்வு செய்துள்ள சஞ்சய் மஞ்சரேக்கர், அதற்கடுத்தடுத்த பேட்டிங் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், மனீஷ் பாண்டே ஆகியோரையும், அதிரடி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, ஸ்பின் ஆல்ரவுண்டர் ராகுல் டெவாட்டியாவையும் ஆல்ரவுண்டர்களாக தேர்வு செய்துள்ளார்.

ஃபாஸ்ட் பவுலர்களாக புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர் ஆகிய இருவருடன் ஐபிஎல் 14வது சீசனில் அபாரமாக பந்துவீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடிய இளம் இடது கை ஃபாஸ்ட் பவுலர் சேத்தன் சகாரியாவையும் தேர்வு செய்துள்ளார்.

ராகுல் டெவாட்டியா ரிஸ்ட் ஸ்பின் ஆல்ரவுண்டர். அவருடன் மற்றொரு ரிஸ்ட் ஸ்பின்னரான ராகுல் சாஹரை தேர்வு செய்துள்ளார் சஞ்சய் மஞ்சரேக்கர்.

சஞ்சய் மஞ்சரேக்கர் தேர்வு செய்த இலங்கைக்கு எதிரான டி20 இந்திய அணி:

ஷிகர் தவான், பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், மனீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, ராகுல் டெவாட்டியா, தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், ராகுல் சாஹர், சேத்தன் சகாரியா.

தோள்பட்டை காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஓய்வெடுத்துவரும் ஷ்ரேயாஸ் ஐயர், இலங்கை தொடரில் இடம்பெறுவாரா என்பது தெரியாததால், அவரை சேர்க்கவில்லை.
 

click me!