பாகிஸ்தானுக்கு எப்படி வாசிம் அக்ரம் - வக்கார் யூனிஸோ இந்தியாவிற்கு அந்தமாதிரி பும்ரா..! சல்மான் பட் புகழாரம்

By karthikeyan VFirst Published May 26, 2021, 8:26 PM IST
Highlights

இந்தியாவின் வாசிம் அக்ரம் - வக்கார் யூனிஸ், பும்ரா என்று அவரை வெகுவாக புகழ்ந்து தள்ளியுள்ளார் பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட்.
 

இந்திய அணியின் பவுலிங் தரம் கடந்த சில ஆண்டுகளில் பன்மடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக பும்ராவின் வருகைக்கு பிறகு, இந்திய அணியின் பவுலிங் வேற லெவலில் உள்ளது. பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார், முகமது சிராஜ், நவ்தீப் சைனி, நடராஜன் என உலகின் மிகச்சிறந்த பவுலிங் யூனிட்டை கொண்ட அணியாக இந்திய அணி திகழ்கிறது.

இந்திய பவுலிங் யூனிட்டை முன்னின்று வழிநடத்துபவர் பும்ரா. வித்தியாசமான பவுலிங் ஆக்‌ஷன், மிரட்டலான வேகம், துல்லியமான லைன் & லெந்த், துல்லியமான யார்க்கர், நல்ல வேரியேஷன் என ஒரு முழு ஃபாஸ்ட் பவுலராக திகழ்ந்து, மிகப்பெரிய பேட்ஸ்மேன்களை மிரட்டிவருகிறார் பும்ரா.

பும்ராவை முன்னாள், இந்நாள் வீரர்கள் பலரும் வெகுவாக புகழ்ந்துவரும் நிலையில், பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட்டும் பும்ராவை புகழ்ந்துள்ளார்.

பும்ரா குறித்து பேசியுள்ள சல்மான் பட், பும்ராவை நியாயமான முறையில் நல்ல விதமாக பயன்படுத்த வேண்டும். பும்ராவை எந்த சூழலில் எப்போது, எப்படி பயன்படுத்துவது என்பது மிக முக்கியம்.  முக்கியமான போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி அவரது பெஸ்ட்டை கொடுப்பார். பும்ரா வித்தியாசமானவர். சமகாலத்தின் தலைசிறந்த பவுலர் பும்ரா.

ரோஹித் சர்மா பும்ராவை மிகச்சரியாக பயன்படுத்துவார். டி20யில் ஆரம்பத்தில் ஒரு ஓவர் மட்டும் கொடுத்துவிட்டு, கடைசி 6 ஓவர்களில் தான் பும்ராவை ரோஹித் அதிகமாக பயன்படுத்துவார். கடைசி சில ஓவர்களில் 30-40 ரன்கள் தேவை எனும்போது, பும்ராவால் அதை கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில், அவரை பயன்படுத்துவார் ரோஹித். அவரும் டெத் ஓவர்களில் ரன்களை விட்டுக்கொடுக்காமல் விக்கெட்டுகளையும் வீழ்த்தி கொடுப்பார்.

பாகிஸ்தானுக்கு வாசிம் அக்ரம் - வக்கார் யூனிஸ் எப்படியோ அந்தளவிற்கு இந்திய அணிக்கு பும்ரா மதிப்புமிக்க வீரர். வாசிம் அக்ரம் - வக்கார் யூனிஸ், எதிரணியிடம் 5 விக்கெட்டுகள் கையில் இருந்தால்கூட, வெறும் 30-40 ரன்களை அடிக்கவிடமாட்டார்கள். பும்ராவும் அதே மாதிரிதான். இந்தியாவிற்காக முக்கியமான போட்டிகளை வென்றுகொடுப்பவர். அவரது டாட் பந்து சராசரி மிகச்சிறப்பாக உள்ளது. துல்லியமான யார்க்கர்கள், வேகமான பவுன்ஸர் என அசத்தலாக வீசக்கூடியவர். இந்தியாவின் விலைமதிப்பற்ற உயர்ந்த வீரர் பும்ரா என்று சல்மான் பட் புகழ்ந்துள்ளார்.
 

click me!