உலக கோப்பையை வெல்ல இந்திய வீரர்களுக்கு டெண்டுல்கரின் முக்கியமான அறிவுரை

By karthikeyan VFirst Published May 24, 2019, 1:27 PM IST
Highlights

உலக கோப்பையை வெல்ல என்ன செய்ய வேண்டும் என்று இந்திய வீரர்களுக்கு மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் அறிவுரை வழங்கியுள்ளார். 

உலக கோப்பை இன்னும் ஒரு வாரத்தில் தொடங்க உள்ளது. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். 1992ம் ஆண்டுக்கு பிறகு இந்த உலக கோப்பையில் தான் அனைத்து அணிகளும் அனைத்து அணிகளுடனும் மோத உள்ளன. அதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் ஒருநாள் போட்டிகளில் ஆக்ரோஷமாக ஆடி கடந்த 2 வருடங்களாக வெற்றிகளை குவித்துவருகின்றன. அதனால் இந்த 2 அணிகளில் ஒன்றுதான் உலக கோப்பையை வெல்லும் என பரவலாக கருதப்படுகிறது. 

இந்திய அணியில் முன்னெப்போதையும் விட பவுலிங் யூனிட் சிறப்பாக இருப்பது கூடுதல் பலம். பேட்டிங்கை பொறுத்தமட்டில் டாப் ஆர்டர் வலுவாக உள்ளது. மிடில் ஆர்டரில் கடந்த 2 ஆண்டுகளாகவே சிறப்பான ஆட்டத்தை பெரிதாக பார்க்கமுடியவில்லை. டாப் ஆர்டரையே இந்திய அணி அதிகமாக சார்ந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக விராட் கோலியையே சார்ந்திருக்கிறது. 

பொதுவாகவே பேட்டிங்கில் இந்திய அணி விராட் கோலியை அதிகமாக சார்ந்திருக்கிறது. உலக கோப்பையில் கோலியும் பும்ராவும் தான் எதிரணிக்கும் இந்திய அணிக்கும் இடையேயான வித்தியாசமான இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், உலக கோப்பையை வெல்ல வேண்டுமென்றால் விராட் கோலியை மட்டுமே சார்ந்திருக்கக்கூடாது என்று மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய சச்சின் டெண்டுல்கர், இந்திய அணியில் எப்போதுமே யாராவது 2 வீரர்கள் மட்டும் சிறப்பாக ஆட வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. ஒரு வீரரால் மட்டுமே கோப்பையை ஜெயித்துவிட முடியாது. முக்கியமான நேரத்தில் அனைத்து வீரர்களும் பொறுப்புணர்ந்து சிறப்பாக ஆட வேண்டும். அப்படி அனைவரும் சரியாக ஆடவில்லை என்றால் அதிருப்திதான் மிஞ்சும் என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். 
 

click me!