India Masters vs West Indies Masters in IML 2025 Final : சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரின் 16ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் சச்சினின் இந்தியா மாஸ்டர்ஸ் மற்றும் பிரைன் லாராவின் வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணிகள் மோதுகின்றன.
India Masters vs West Indies Masters in IML 2025 Final : சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்கின் இறுதிப் போட்டியில் இரண்டு கிரிக்கெட் ஜாம்பவான்கள் மோதுகிறார்கள். மார்ச் 16, ஞாயிற்றுக்கிழமை, சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரையன் லாரா ஆகியோர் ராய்ப்பூரில் உள்ள SVNS சர்வதேச மைதானத்தில் நடைபெறும் போட்டியில் முறையே இந்தியா மாஸ்டர்ஸ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணிகளுக்கு தலைமை தாங்குகிறார்கள். இந்தியா மாஸ்டர்ஸ் அணி, போட்டியின் தொடக்கத்திலிருந்து சாம்பியன் பட்டம் வெல்லும் அணியாக இருந்தது. லீக் சுற்றில் ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸிடம் அடைந்த தோல்விக்கு, அரையிறுதியில் ஷேன் வாட்சனின் அணியை வீழ்த்தி பழி தீர்த்தது.
இந்தியா மாஸ்டர்ஸ் அணி, இலங்கை மாஸ்டர்ஸ் அணிக்கு எதிராக 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. பின்னர் இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தென் ஆப்பிரிக்கா மாஸ்டர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்தது. 4ஆவது போட்டியில் ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அணி அவர்களின் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இருப்பினும், சச்சின் டெண்டுல்கரின் அணி, வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, மீண்டும் உத்வேகம் பெற்றது. இதன் மூலம் லீக் சுற்றில் 2ஆவது இடத்தைப் பிடித்தது. பின்னர் அரையிறுதியில் ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அணியை 94 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
மறுபுறம், வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணியும் ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் மற்றும் இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்றது. இருப்பினும், இலங்கை மாஸ்டர்ஸ் மற்றும் இந்தியா மாஸ்டர்ஸ் அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வியடைந்தது. தென் ஆப்பிரிக்கா மாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. மார்ச் 14 நேற்று நடைபெற்ற 2ஆது அரையிறுதியில் இலங்கை மாஸ்டர்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
ஞாயிற்றுக்கிழமை 16ஆம் தேதி நடைபெறும் இந்தியா மாஸ்டர்ஸ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐஎம்எல் இறுதிப் போட்டி, அற்புதமான போட்டியாக இருக்கும். கிரிக்கெட் ஜாம்பவான்கள் மற்றும் நட்சத்திர வீரர்களின் ஆட்டத்தை மீண்டும் ஒருமுறை ரசிகர்கள் காணும் வாய்ப்பாக இது அமையும். இன்று நடைபெறும் இறுதிப் போட்டியை போட்டி ஜியோஹாட்ஸ்டார் மற்றும் கலர்ஸ் சினிப்ளெக்ஸ் (SD & HD) மற்றும் கலர்ஸ் சினிப்ளெக்ஸ் சூப்பர்ஹிட்ஸ் சேனல்களில் இரவு 7 மணி முதல் நேரலையில் காணலாம்.