10-12 வருஷம் தூக்கமே இல்லாமல் கஷ்டப்பட்டேன்..! மனம் திறந்த மாஸ்டர் பிளாஸ்டர்.. வாழ்க்கைக்கான சிறந்த பாடம்

By karthikeyan VFirst Published May 17, 2021, 4:18 PM IST
Highlights

10-12 ஆண்டுகள் போட்டிக்கு முந்தைய இரவுகள் தூக்கமே இல்லாமல் தவித்ததாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
 

சர்வதேச கிரிக்கெட்டின் ஆல்டைம் தலைசிறந்த பேட்ஸ்மேன் லெஜண்ட் சச்சின் டெண்டுல்கர். 24 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடி 100 சதங்களுடன் 34,357 ரன்களை குவித்து, பல்வேறு பேட்டிங் சாதனைகளுக்கு சொந்தக்காரராக திகழ்பவர் சச்சின் டெண்டுல்கர்.

2013ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார் சச்சின் டெண்டுல்கர். சச்சின் டெண்டுல்கரை பற்றிய விஷயங்களை தெரிந்துகொள்வதென்றால், தலைமுறை கடந்த ரசிகர்களுக்கும் பேரார்வம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அந்தவகையில் அன் அகாடமி நடத்திய ஒரு விவாதத்தில் பேசிய சச்சின் டெண்டுல்கர், தனது கெரியரில் தான் எதிர்கொண்ட பெரும் சவால் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

அந்த நிகழ்வில் பேசிய சச்சின் டெண்டுல்கர், போட்டிக்கு உடலளவில் தயாராவது மட்டுமல்ல; மனதளவில் தயாராவதும் முக்கியம். குறிப்பிட்ட காலம், போட்டி குறித்த அதீத சிந்தனையுடனேயே இருப்பேன். 

அதனால் 10-12 ஆண்டுகள், போட்டிக்கு முந்தைய இரவுகள் தூங்கவே மாட்டேன். போட்டி குறித்த சிந்தனையில் தூக்கமே வராது. போட்டிக்கான எனது தயாரிப்பில், அதீத சிந்தனையும், தூக்கமின்மையும் அங்கமாகவே மாறியிருந்தது. 

அதிலிருந்து மீள, எனது கவனத்தை திசைதிருப்பினேன். டீ போடுவது, எனது துணிகளை அயன் செய்வது ஆகிய பணிகளை செய்வேன். அது போட்டிக்கான எனது தயாரிப்பிற்கு வெகுவாக உதவியது. எனது பையை போட்டிக்கு முந்தைய நாளே பேக் செய்து வைத்துவிடுவேன். என் அண்ணன் சொல்லிக்கொடுத்த இந்த பழக்கத்தை எனது வழக்கமாகவே மாற்றிவிட்டேன். இந்தியாவுக்காக நான் ஆடிய கடைசி போட்டிவரை அதை செய்தேன். எதையும் ஏற்றுக்கொள்வதுதான் முக்கியம். அனைத்தையும் ஏற்றுக்கொண்டோம் என்றால், தீர்வுகளை தேட ஆரம்பித்துவிடுவோம் என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார்.
 

click me!