பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டை மிரட்டி மீண்டும் அணியில் சேர முயற்சிக்கிறார் ஆமீர்..! கனேரியா கடும் குற்றச்சாட்டு

By karthikeyan VFirst Published May 17, 2021, 3:12 PM IST
Highlights

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து திடீரென ஓய்வுபெற்ற முகமது ஆமீர், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி மிரட்டி பார்க்க முயற்சிக்கிறார் என்று டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார்.
 

சர்வதேச கிரிக்கெட்டில் எல்லா காலக்கட்டத்திலும் மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலர்கள் பாகிஸ்தான் அணியில் இருந்துள்ளனர். வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஷோயப் அக்தர், முகமது ஆமீர், சமி, ஜுனைத் கான் என பல சிறந்த ஃபாஸ்ட் பவுலர்கள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள்.

அப்படிப்பட்ட சிறந்த பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவர் முகமது ஆமீர். 2009ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியில் அறிமுகமான ஆமீர், 36 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 119 விக்கெட்டுகளையும், 61 ஒருநாள் போட்டிகளில் ஆடி 81 விக்கெட்டுகளையும், 50 டி20 போட்டிகளில் 59 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ள ஆமீர், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து மட்டும் ஓய்வுபெற்றார்.

வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில்(டி20, ஒருநாள்) கவனம் செலுத்தும் விதமாக டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றதாக ஆமீர் தெரிவித்தார். ஆனால் ஆமீர் சுயநலவாதி என்ற விமர்சனம் எழுந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்கிய ஆமீருக்கு ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இடம் கொடுக்காமல் ஒதுக்கியது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.

இதையடுத்து உடனடியாக அனைத்துவிதமான போட்டிகளிலிருந்தும் ஓய்வு அறிவித்த முகமது ஆமீர், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தன்னை மதிப்புடன் நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டை பலமுறை முன்வைத்தார். மேலும், இங்கிலாந்து குடியுரிமை பெற்று அதன்மூலம் ஐபிஎல்லில் ஆடவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அணி தேர்வு முறை மற்றும் அதன் செயல்பாடு குறித்து பல்வேறு விமர்சனங்களையும் முன்வைத்தார்.

இந்நிலையில், முகமது ஆமீர் குறித்து பேசியுள்ள பாக்., லெக் ஸ்பின்னர் டேனிஷ் கனேரியா, முகமது ஆமீருக்கு அவரது கருத்தை கூற முழு உரிமை இருக்கிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை மிரட்டி மீண்டும் பாகிஸ்தான் அணியில் சேர முயற்சிக்கிறார் ஆமீர். இங்கிலாந்து குடியுரிமை பெற்று ஐபிஎல்லில் ஆட முயற்சிப்பதாக கூறுவது மிரட்டல் தான்.

சூதாட்ட புகாரில் சிக்கிய முகமது ஆமீருக்கு மீண்டும் நாட்டுக்காக ஆடும் வாய்ப்பை கொடுத்தது பாகிஸ்தான் கிரிக்கெட். ஆனால் ஒன்றரை ஆண்டுகளில் அவர் படுமோசமாக ஆடினார். அவரது பெர்ஃபாமன்ஸ் ஜீரோ. 2017 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் நன்றாக வீசினார் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அதன்பின்னர் படுமோசமாக சொதப்பினார் ஆமீர் என்று கனேரியா தெரிவித்துள்ளார்.
 

click me!