சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப்போட்ட அந்த தருணம்

By karthikeyan VFirst Published Sep 29, 2019, 5:02 PM IST
Highlights

சச்சின் டெண்டுல்கர் முதன்முறையாக தொடக்க வீரராக இறங்கும் வாய்ப்பை பெற்றது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். இளம் வீரர்கள் தோல்வியை கண்டு துவண்டுவிடக்கூடாது என்பதற்காக ஊக்கமளிக்கும் விதமாக தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். 

சர்வதேச கிரிக்கெட்டில் தனது பெயரை முத்திரையாக பதித்தவர் சச்சின் டெண்டுல்கர். ஆல்டைம் சிறந்த வீரர்களில் முதன்மையானவர் சச்சின். சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களை விளாசியவர். ஒருநாள் கிரிக்கெட்டில் ஆல்டைம் சிறந்த தொடக்க வீரராக திகழும் சச்சின் டெண்டுல்கர், அந்த வாய்ப்பை கெஞ்சி கூத்தாடி பெற்றதாக தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் பேசியுள்ள சச்சின்,  1994ல் நியூசிலாந்து தொடரில் நான் கெஞ்சி கூத்தாடிதான் தொடக்க வீரராக இறங்கினேன். அப்போதைய சூழலில், விக்கெட்டை விரைவில் இழந்துவிடக்கூடாது என்பதுதான் அனைத்து அணிகளின் எண்ணமாக இருந்தது. அதற்கேற்பவே தொடக்க வீரர்கள் ஆடினார்கள். ஆனால் நான் அதை மாற்றி, தொடக்கத்திலேயே பவுலர்களை தெறிக்கவிட நினைத்தேன். தொடக்க வீரரின் பரிமாணத்தை மாற்ற நினைத்தேன்.

ஆனால் தொடக்க வீரராக இறங்க வாய்ப்பு வேண்டுமல்லவா.. அதனால் தொடக்க வீரராக இறங்க வாய்ப்பு கேட்டு கெஞ்சினேன்; வாய்ப்பையும் பெற்றேன். தொடக்க வீரராக இறங்கிய முதல் போட்டியிலேயே அதிரடியாக ஆடி 49 பந்துகளில் 82 ரன்களை குவித்தேன். அதன்பின்னர் எனக்கான வாய்ப்பை நான் கேட்கவே தேவையில்லை. அதுவாகவே வந்தது. இதை ஏன் சொல்கிறேன் என்றால், தோல்வியால் வீரர்கள் துவண்டு போகக்கூடாது என்பதற்காகத்தான் என்று சச்சின் தெரிவித்துள்ளார். 

சச்சின் சொன்ன இந்த சம்பவத்திற்கு பின்னர் நடந்ததெல்லாம் வரலாறு. சச்சின் தொடக்க வீரராக இறங்கி ஒருநாள் போட்டிகளில் அவர் சாதித்தது மற்றும் அணிக்கு வெற்றிகளை தேடிக்கொடுத்தது எல்லாம் வரலாறாக இருக்கிறது. 
 

click me!