
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவர் யார் என்பது குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. முன்னாள் தலைவர் ரோஜர் பின்னி பதவியில் இருந்து விலகியதை அடுத்து, அடுத்த தலைவர் யார் என்பதை அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். சச்சின் டெண்டுல்கர் புதிய தலைவராகப் பொறுப்பேற்பார் என்ற பேச்சு எழுந்த நிலையில், அவர் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது.
தான் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவிக்கான போட்டியில் பங்கேற்கப் போவதில்லை என்று சச்சின் டெண்டுல்கர் தனது நெருங்கிய உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 28ஆம் தேதி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 94வது ஆண்டு பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் வாரியத்தின் புதிய தலைவர் மற்றும் கூட்டத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
முன்னாள் வீரர் ரோஜர் பின்னிக்குப் பிறகு, மீண்டும் ஒரு முன்னாள் வீரரே தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதனால் சச்சின் டெண்டுல்கரின் பெயர் ஊடகங்களில் அடிபடத் தொடங்கியது. தற்போதைய சூழலில் சச்சினால் பிசிசிஐ தலைவர் பதவிக்கு நேரம் ஒதுக்க முடியாததால், அவர் தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்பம் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
வணிகப் பணிகளில் சச்சின் மும்முரமாக ஈடுபட்டுள்ளதால், பிசிசிஐ தலைவர் பதவிக்கு நேரம் ஒதுக்குவது அவருக்குச் சாத்தியமில்லை. பிசிசிஐ தலைவர் பதவிக்கு முன்னாள் வீரர்களின் பெயர்களே அதிகம் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், இந்தப் போட்டியில் மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகளில் சிலர் ஆர்வம் காட்டி வருவதாகவும், அவர்கள் போட்டியில் களமிறங்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.