அதெல்லாம் வேலைக்கே ஆகாது.. மௌனம் கலைத்த மாஸ்டர் பிளாஸ்டர்

By karthikeyan VFirst Published Jan 7, 2020, 5:52 PM IST
Highlights

டெஸ்ட் போட்டிகளை 4 நாட்களாக குறைத்து நடத்துவது குறித்த ஐசிசியின் திட்டத்திற்கு தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர்.
 

டி20 கிரிக்கெட்டின் வருகைக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட் மீதான ரசிகர்களின் ஆர்வம் குறைந்துவிட்டது. டெஸ்ட் போட்டிகளை காண ரசிகர்கள் ஸ்டேடியத்திற்கு வருவதும் வெகுவாக குறைந்துவிட்டது. எனவே டெஸ்ட் கிரிக்கெட்டை நோக்கி ரசிகர்களை கவர, ஐசிசி-யும் பல நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களும் பல விதமான சீரிய முயற்சிகளை எடுத்துவருகின்றன.

டெஸ்ட் கிரிக்கெட்டை நோக்கி ரசிகர்களை ஈர்க்கும் விதமாக ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப், பகலிரவு டெஸ்ட் போட்டிகள் ஆகியவை நடத்தப்படுகின்றன. இந்நிலையில், அடுத்ததாக ஐசிசி முன்னெடுத்திருக்கும் முயற்சிக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. 

பாரம்பரியமாக 5 நாட்கள் நடத்தப்படும் டெஸ்ட் போட்டியை 4 நாட்களாக குறைப்பது குறித்து ஐசிசி விவாதித்து வருகிறது. ஐசிசி-யின் இந்த முயற்சிக்கு முன்னாள் வீரர்கள் முதல் இந்நாள் வீரர்கள் வரை பலரும் எதிர்ப்பு தெரிவித்திருவருகின்றனர். 

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான க்ளென் மெக்ராத்தும் இந்நாள் வீரரான நேதன் லயனும் எதிர்ப்பு தெரிவித்தனர். டெஸ்ட் போட்டியை 4 நாட்களாக குறைக்கும் முயற்சிக்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரும் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள சச்சின், டெஸ்ட் கிரிக்கெட்டில் மாற்றம் கொண்டுவருவது சரியல்ல. பாரம்பரியமாக பல்லாண்டுகளாக ஆடப்பட்டுவரும் டெஸ்ட் போட்டியை, அதேமாதிரிதான் தொடர்ந்து ஆட வேண்டும். அதில் எந்தவித மாற்றமும் செய்யக்கூடாது. 

அப்படி குறைத்தால், பேட்ஸ்மேன்களின் பார்வையில் இது, ஒருநாள் கிரிக்கெட்டின் நீட்சியாகத்தான் பார்க்கப்படுமே தவிர டெஸ்ட் கிரிக்கெட்டாக பார்க்கப்படமாட்டாது. இரண்டாம் நாள் உணவு இடைவேளையின்போது, இன்னும் இரண்டரை நாள் தான் இருக்கிறது என்ற எண்ணம் வரும். அது வீரர்களின் சிந்தனையையும் ஆட்டத்தின் போக்கையும் மாற்றிவிடும் என்று சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார். 
 

click me!