சச்சின் - ஜெயவர்தனே 2 ஜாம்பவான்களின் ஆத்மார்த்த பாராட்டை பெற்ற இளம் வீரர்

By karthikeyan VFirst Published May 13, 2019, 5:42 PM IST
Highlights

பும்ரா சர்வதேச அளவில் நம்பர் 1 பவுலராக திகழ்கிறார். அதனால் அவர் நெருக்கடியான சூழல்களிலும் பதற்றப்படாமல் அபாரமாக பந்துவீசுவதில் ஆச்சரியமில்லை. 

ஐபிஎல்லில் யார் கெத்து..? நீயா நானா என்ற போட்டியில் சிஎஸ்கேவை வீழ்த்தி நான்காவது முறையாக கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ். இதற்கு முன்னர் தலா 3 முறை கோப்பையை வென்றிருந்த இரு அணிகளும் நான்காவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கின. 

இந்த போட்டியில் சிஎஸ்கேவை வீழ்த்தி மும்பை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. மும்பை அணி இந்த சீசனை வெல்ல 3-4 வீரர்கள் முக்கிய பங்காற்றினர். இந்த சீசன் முழுவதுமே ரோஹித் பெரியளவில் ஆடவில்லை. முக்கியமான போட்டிகளில் சரியாக ஆடவில்லை. 

ஆனால் பும்ரா, ராகுல் சாஹர், ஹர்திக் பாண்டியா, குயிண்டன் டி காக் ஆகியோர் எல்லா போட்டிகளிலும் சிறப்பான பங்களிப்பு செய்தனர். இறுதி போட்டியிலும் பும்ராவும் ராகுல் சாஹரும் அபாரமாக செயல்பட்டனர். போதாத ஸ்கோர் அடித்தாலும் பும்ரா மற்றும் ராகுல் சாஹரின் அபாரமான பவுலிங்கால் சுருட்டிவிடுகிறது மும்பை இந்தியன்ஸ். 

பும்ரா சர்வதேச அளவில் நம்பர் 1 பவுலராக திகழ்கிறார். அதனால் அவர் அபாரமாக பந்துவீசுவதில் ஆச்சரியமில்லை. ஆனால் இளம் ரிஸ்ட் ஸ்பின்னர் ராகுல் சாஹர், நெருக்கடியான சூழல்களில் பல முறை கேம் சேஞ்சிங் பெர்ஃபார்மன்ஸ் கொடுத்துள்ளார். மிடில் ஓவர்களில் எதிரணிகளின் ரன்னை கட்டுப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த சீசன் அவருக்கு அபாரமாக இருந்துள்ளது. 

சிஎஸ்கேவிற்கு எதிரான இறுதி போட்டியில் கூட 4 ஓவர்கள் வீசி வெறும் 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். இந்த சீசனில் 13 போட்டிகளில் ஆடி 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். விக்கெட்டுகள் அதிகமாக வீழ்த்தவில்லை என்றாலும் அவரது எகானமி ரேட் வெறும் 6.55. அதுவும் ஐபிஎல் மாதிரியான ஒரு தொடரில் இப்படியான எகானமி ரேட் வைத்திருப்பது பெரிய விஷயம். 

இறுதி போட்டிக்கு பின்னர் பேசிய மும்பை அணியின் ஐகான் சச்சின் டெண்டுல்கர், ராகுல் சாஹரை பாராட்டி தள்ளினார். ராகுல் சாஹர் அவரது முதல் போட்டியை ஆடுவதற்கு முன்பே, அவர் அபாரமான திறமைசாலி என்று ஜெயவர்தனேவிடம் கூறினேன். ஆறாவது ஓவர் முதல் 15வது ஓவர் வரையிலான மிடில் ஓவர்களில் ஸ்லிப்பை நிறுத்தி பவுலிங் செய்கிறார். அது சாதாரண விஷயமல்ல. முக்கியமான போட்டியில் அபாரமாக வீசியுள்ளார் என்று ராகுல் சாஹரை பாராட்டினார். 

மும்பை அணியின் தலைமை பயிற்சியாளர் ஜெயவர்தனேவும் ராகுல் சாஹரை பாராட்டினார். இந்த சீசன் முழுவதுமே ராகுல் அபாரமாக வீசினார். எதிரணிகளுக்கு நெருக்கடியை உருவாக்கி வெற்றிக்கு வழிவகுத்தார் என ஜெயவர்தனே பாராட்டினார். 
 

click me!