அவரிடம் தோனியின் கேப்டன்சி சாயல் உள்ளது.. அதுக்காக அடுத்த கேப்டன்னு இப்பவே சொல்லிவிட முடியாது

By karthikeyan VFirst Published May 28, 2021, 7:08 PM IST
Highlights

ரிஷப் பண்ட்டின் கேப்டன்சியில் தோனியின் சாயல் இருப்பதாகவும், ஆனால் அதற்காக இப்போதே அவர் தான் இந்திய அணியின் அடுத்த கேப்டன் என்று சொல்லிவிட முடியாது என்றும் இந்திய அணியின் முன்னாள் வீரர் சபா கரீம் தெரிவித்துள்ளார்.
 

தோனிக்கு அடுத்து இந்திய அணியின் விக்கெட் கீப்பருக்கான இடத்தை உறுதி செய்துள்ள ரிஷப் பண்ட், இந்திய அணியில் எடுக்கப்பட்ட புதிதில் முதிர்ச்சியில்லாமல் ஆடி, இந்திய அணியில் இடத்தை இழந்தார். 

ஆனால் இப்போது அவரது  பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் ஆகிய இரண்டுமே முன்பைவிட மேம்பட்டிருக்கிறது. இப்போது முதிர்ச்சியுடன் ஆடுகிறார். பேட்டிங், விக்கெட் கீப்பிங்கில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் தனக்கான இடத்தை உறுதி செய்துவிட்ட ரிஷப் பண்ட், ஐபிஎல்லில் டெல்லி கேபிடள்ஸ் அணியை வழிநடத்த கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தனது கேப்டன்சி திறனையும் நிரூபித்துவிட்டார்.

ஷ்ரேயாஸ் ஐயர் காயத்தால் ஐபிஎல் 14வது சீசனில் ஆடாததன் காரணமாக, டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு கேப்டனாகும் வாய்ப்பை பெற்ற ரிஷப் பண்ட், ஒரு தேர்ந்த கேப்டனாக செயல்பட்டு, டெல்லி அணிக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுத்து  புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்க வைத்தார்.

விராட் கோலிக்கு அடுத்த இந்திய அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் தான் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் தேர்வாளருமான கிரண் மோர் தெரிவித்திருந்தார். பாகிஸ்தான் முன்னாள் தொடக்க வீரர் சல்மான் பட்டும் ரிஷப் பண்ட் தான் அடுத்த கேப்டன் என்று கூறியதுடன், அவரது கேப்டன்சியை புகழ்ந்து பேசியிருந்தார்.

இந்நிலையில், அதுகுறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் சபா கரீம், ரிஷப் பண்ட் தான் இந்திய அணியின் அடுத்த கேப்டன் என்று இப்போதே சொல்லிவிடமுடியாது. அதைப்பற்றி பேசுவதற்கு இது ரொம்ப சீக்கிரம். ரிஷப் அபாரமான பேட்ஸ்மேன். அவரது பேட்டிங்கை போலவே கேப்டன்சியும் சிறப்பாகவே உள்ளது. அவரது வித்தியாசமான ஸ்டைல் பார்ப்பவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும். 

அவருடன் ஆடும் அனைத்து வீரர்களும் மகிழ்ந்து ஆட வேண்டும் என்று விரும்புகிறார். தோனியின் கேப்டன்சி சாயல் ரிஷப்  பண்ட்டிடம் தெரிகிறது. இருவரின் அணுகுமுறையிலும், எடுக்கும் முடிவுகளிலும் ஒற்றுமை இருக்கிறது. தோனியை போலவே ரிஷப்பும் உள்ளுணர்வின்படி செயல்படுகிறார் என்றார் சபா கரீம்.
 

click me!