என்னை ஏன் டீம்ல இருந்து தூக்குனாங்கனு இதுவரை எனக்கு தெரியாது.. தோனியால் ஓரங்கட்டப்பட்ட பலரில் ஒருவர் வேதனை

By karthikeyan VFirst Published Apr 26, 2020, 8:49 PM IST
Highlights

திறமையான வீரராக இருந்தும் ஏன் ஒதுக்கப்பட்டார்கள் என்றே தெரியாத பல வீரர்களில் ஒருவரான ஆர்பி சிங், தான் ஓரங்கட்டப்பட்டது ஏன் என்று இதுவரை தனக்கு தெரியாது என்று ஆர்பி சிங் தெரிவித்துள்ளார்.
 

இந்திய அணியின் மிகச்சிறந்த இடது கை ஃபாஸ்ட் பவுலர்களில் ஆர்பி சிங்கும் ஒருவர். ஜாகீர் கானுக்கு அடுத்து இந்திய அணிக்கு கிடைத்த சிறந்த இடது கை ஸ்விங் பவுலர்.  இடது கை ஃபாஸ்ட் பவுலர்களின் பவுலிங் பார்க்கவே அபாரமாக இருக்கும். அப்படியான லிஸ்ட்டில் ஆர்பி சிங்கும் ஒருவர். ஜாகீர் கானை போலவே அருமையாக ஸ்விங் செய்யக்கூடியவர் என்பதால், ஸ்விங்கின் சுல்தான் என்று அழைக்கப்பட்டார். 

அருமையான பவுலரான ஆர்பி சிங், இந்தியாவில் மட்டுமல்லாமல் இந்தியாவிற்கு வெளியேயும் பல சிறந்த ஸ்பெல்களை வீசியுள்ளார். ஆனாலும் 2005ம் ஆண்டில் இந்திய அணியில் அறிமுகமான ஆர்பி சிங், 2011ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணியில் ஆடவேயில்லை. 

தோனியால் கழட்டிவிடப்பட்ட உத்தப்பா, இர்ஃபான் பதான் போன்ற பல திறமையான வீரர்கள் பட்டியலில் ஆர்பி சிங்கும் ஒருவர். இந்திய அணிக்காக 14 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 40 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 58 ஒருநாள் போட்டிகளில் ஆடி 69 விக்கெட்டுகளையும் 10 டி20 போட்டிகளில் ஆடி 15 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

2007 டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்றபோது அந்த உலக கோப்பை தொடரில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய பவுலர் ஆர்பி சிங் தான். ஆனால் அதன்பின்னர் வெறும் மூன்றே மூன்று சர்வதேச போட்டிகளில் மட்டுமே ஆர்பி சிங் ஆடியது மிகப்பெரிய கொடுமை.

2011க்கு பிறகு இந்திய அணியிலிருந்து ஏன் நீக்கப்பட்டார் என்பதே தெரியாமல் நீக்கப்பட்ட வீரர்களில் ஆர்பி சிங்கும் ஒருவர். நல்ல திறமையான பவுலராக இருந்தும் கூட அணி தேர்வுக்குழுவால் ஓரங்கட்டப்பட்டார். 

இந்நிலையில், முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராவுடன் உரையாடிய ஆர்பி சிங், அதுகுறித்து பேசினார். அப்போது, டி20 கிரிக்கெட் அறிமுகமான முதல் 3-4 ஆண்டுகளில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்களில் நானும் ஒருவன் என நினைக்கிறேன். அப்படியிருந்தும் கூட, நான் அணியில் எடுக்கப்படவில்லை என்றால், என் மீது கேப்டனுக்கு நம்பிக்கையில்லாமல் இருந்திருக்கலாம் அல்லது எனது ஆட்டத்திறன் குறைந்திருக்கலாம். ஆனால் என்ன காரணம் என்பதை தேர்வாளர்கள் என்னிடம் சொல்லவேயில்லை.

இந்திய அணிக்காக ஆடும் முன்பே எனக்கும் தோனிக்கும் பழக்கம் இருந்தது. நிறைய நேரம் ஒன்றாக அமர்ந்து பேசியிருக்கிறோம். அவர் இந்திய அணியின் கேப்டனான பிறகு, அவரது கெரியர் கிராஃப் உயர்ந்து கொண்டே போனது. ஆனால் அதற்கு நேர்மாறாக எனது கெரியர் கிராஃப் வீழ்ச்சியை சந்தித்தது.

நாங்கள் இருவரும் நண்பர்கள் தான். நிறைய நேரம் ஒன்றாக செலவிட்டிருக்கிறோம். நிறைய விஷயங்கள் குறித்து பேசியிருக்கிறோம். ஆனால் கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் எனக்கும் அவருக்கும் கருத்து மாறுபாடுகள் இருந்தன. ஒருமுறை, நான் அவரிடம் கேட்டேவிட்டேன். நான் இந்திய அணிக்காக நிறைய போட்டிகளில் ஆட வேண்டுமென்றால், நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன். அதற்கு அவர்(தோனி), உனக்கு அதிர்ஷ்டமில்லாமல் இருக்கலாம் என்று தெரிவித்தார். ஆனால் இதுவரை நான் ஏன் அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்டேன் என்ற காரணம் எனக்கு தெரியாது என்று ஆர்பி சிங் தெரிவித்துள்ளார்.
 

click me!