எல்லையில் அத்துமீறுவதை நிறுத்துங்க! அந்த பணத்தை மிச்சம்செய்து ஹாஸ்பிடல் கட்டுங்க!அக்தருக்கு கபில்தேவின் பதிலடி

By karthikeyan VFirst Published Apr 25, 2020, 5:55 PM IST
Highlights

கொரோனாவை எதிர்கொள்ள நிதி திரட்டும் விதமாக இந்தியா - பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டிகளை நடத்தலாம் என்ற அக்தரின் கருத்துக்கு ஏற்கனவே பதிலடி கொடுத்திருந்த கபில் தேவ், தற்போது மறுபடியும் செம பதிலடி கொடுத்திருக்கிறார்.
 

கொரோனாவால் உலக நாடுகள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா உட்பட பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கொரோனா தடுப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஊரடங்கால் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 

இந்நிலையில், கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பிற்கு நிதி திரட்டும் வகையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே 3 போட்டிகள் ஒருநாள் தொடரை நடத்தி, அதன்மூலம் நிதி திரட்டலாம் என அக்தர் தெரிவித்திருந்தார். அதாவது ரசிகர்கள் இல்லாமல் அந்த தொடரை நடத்தி, தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தின் மூலம் கிடைக்கும் தொகையை நிதியாக திரட்டலாம் என்று அக்தர் தெரிவித்திருந்தார். 

இந்தியா - பாகிஸ்தான் இடையே ராஜாங்க ரீதியில் சரியான உறவு இல்லாததால் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் ஆடுவதை இந்தியா நிறுத்திவிட்டது. ஐசிசி தொடர்களை தவிர வேறு எதிலும் இந்தியா, பாகிஸ்தானுடன் ஆடுவதில்லை. இந்நிலையில் தான் அக்தர், இரு அணிகளும் இணைந்து ஆடலாம் என்று தெரிவித்திருந்தார்.

அக்தரின் கருத்துக்கு ஏற்கனவே பதிலளித்திருந்த கபில் தேவ், பிசிசிஐயிடம் போதுமான நிதி இருக்கிறது. பிரதமரின் நிதிக்கு ரூ.51 கோடி பிசிசிஐ நிதியுதவி அளித்திருக்கிறது. அந்தளவிற்கு பிசிசிஐயிடம் போதுமான நிதி இருக்கிறது. இந்த நேரத்தில் வீரர்களின் பாதுகாப்பே முக்கியம். வீரர்களை ரிஸ்க் எடுத்து கிரிக்கெட் போட்டிகளில் ஆடவைக்க வேண்டிய அவசியம் இல்லை. இப்போதைக்கு  கிரிக்கெட்டை பற்றி நினைத்துக்கூட பார்க்கமுடியாது என்று கபில் தேவ் பதிலடி கொடுத்திருந்தார். 

இந்நிலையில், கபில் தேவ் அளித்த ஒரு பேட்டியில் மீண்டும் தனது கருத்தை வலுவாக பதிவு செய்துள்ளார். அக்தரின் ஆலோசனை குறித்து பேசிய கபில் தேவ், நான் தொலைநோக்குடன் பரந்த பார்வையில் பார்க்கிறேன். இப்போது கிரிக்கெட் தான் முக்கியமா? கிரிக்கெட்டை பற்றி பேசும் நிலையிலா நாம் இருக்கிறோம்? அதைவிட பெரிய கவலைகள் எல்லாம் இருக்கின்றன. குழந்தைகளும் மாணவர்களும் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் போக முடியாத சூழல் உள்ளது. அவர்கள் எப்போது பள்ளிக்கும் கல்லூரிக்கும் செல்ல முடியும் என்பதை பற்றியது தான் எனது சிந்தனை. ஏனெனில் அவர்கள் தான் எதிர்காலம். எனவே பள்ளிகளும் கல்லூரிகளும் திரும்ப திறக்கப்படுவதுதான் முக்கியமே தவிர, கிரிக்கெட் போட்டிகள் அல்ல. கிரிக்கெட், கால்பந்து போட்டிகள் எல்லாம் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம். 

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் நடக்கத்தான் வேண்டும். ஆனால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நேரமா இது? உங்களுக்கு(பாகிஸ்தானுக்கு) பணம் தான் பிரச்னை என்றால், எல்லைகளில் அத்துமீறுவதை நிறுத்துங்கள். அதற்கு செலவு செய்யும் பணத்தை மிச்சம் செய்து மருத்துவமனைகளையும் பள்ளிக்கூடங்களையும் கட்டுங்கள் என்று கபில் தேவ் காட்டமாக தெரிவித்துள்ளார்.

click me!